You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகள்
அமெரிக்காவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல யூடியூப் காணொளிப் பதிவரான இவான் எடிங்கர் யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகளைப் பட்டியலிடுகிறார்.
1. ஆட்சென்ஸ்
யூடியூப் பதிவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான முதல் வழியே விளம்பரங்கள்தான்.
ஆனால், மாறிவரும் சூழலும் யூடியூபில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் விளம்பர வருமானத்தின் அளவு குறைவதற்குக் காரணமாகியுள்ளன.
நீங்கள் யூடியூபில் ஒரு காணொளியை பார்ப்பதற்கு முன்பு வரும் விளம்பரத்தைத்தான் இவான் இங்கு குறிப்பிடுகிறார்.
ஒரு குறிப்பிட்ட காணொளியில் விளம்பரமானது ஒவ்வொரு ஆயிரம் முறை பார்க்கப்படும்போதும் அதை பதிவேற்றியவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதாவது சில விடயங்களை அடிப்படையாக கொண்டு ஒன்று முதல் ஐந்து டாலர்கள் வழங்கப்படும்.
தற்சமயம் இந்தத் தொகை குறைந்து வருவதுடன், விளம்பரம் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை யூடியூப் எடுத்துகொள்வதாக இவான் கூறுகிறார்.
உங்களின் ஒரு காணொளி பத்து இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு வருமானமாக சுமார் 64,000 ரூபாய் முதல் 3,20,000 ரூபாய் கிடைக்கும் என்று இவான் விளக்குகிறார்.
2. பாட்ரியான்
பாட்ரியான் என்பதன் மூலம் யூடியூப் பதிவர்கள் பணம் ஈட்டுகின்றனர்.
இவான் பாட்ரியானை, "இணைய வெகுமதிப் பெட்டி" என்று குறிப்பிடுகிறார்.
"உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ யூடியூபில் காணொளியை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உண்மையிலேயே பிடிக்கிறதென்றால் அதற்கு நீங்கள் உங்களால் இயன்ற தொகையை குறிப்பிட்ட ஒரு காணொளிக்கென ஒருமுறையோ அல்லது அதை பதிவேற்றியவருக்கு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையையோ அளித்து உதவிக்கரம் நீட்டலாம்."
அவ்வாறு உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கென யூடியூப் பதிவாளர்கள் ஒரு தனிப் பக்கத்தை பராமரித்து அதன் மூலம் பிரத்யேக காணொளிகளை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
எனவே, இதுபோன்ற வழிமுறைகளை கையாள்வதன் மூலமாகவும் யூடியூபில் பணம் சம்பாதிக்கலாம்.
3. இணைப்புகளைப் பதிவிடல்
இது குறிப்பாக பேஷன் மற்றும் அழகுக் கலை சார்ந்த தயாரிப்புகளுக்கு மிகவும் பொருந்தக் கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி யூடியூபில் காணொளி பதிவேற்றும் ஒருவர் அதன் விளக்கவுரையில் அது சார்ந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் இணைப்புகளை பதிவிடுவார்.
"அவர்கள் தங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதுடன், அதற்காக 5-20% பணத்தையும் பெறுகின்றனர்."
இவ்வாறு கிடைக்கும் பணமானது, நீங்கள் காணொளியின் மூலம் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு அந்நிறுவனம் கூறும் நன்றி போன்றதாகும்.
அதாவது, குறிப்பிட்ட யூடியூப் பதிவரின் கணக்கின் விளக்கவுரையிலோ அல்லது சுயவிவர பக்கத்திலோ இருக்கும் இணைப்புகளை பயனர் ஒருவர் சொடுக்கி அத்தயாரிப்பை வாங்கும் பட்சத்தில் அதன் மூலம் பணம் ஈட்டப்படுகிறது.
4. பொருள் விற்பனை
காட்சியில் தெரியும் பதாகைகள், கைப்பட்டைகள், சட்டைகள், கைபேசி உறைகள் போன்றவை எல்லாமே யூடியூப் பதிவாளர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளாகும்.
5. தயாரிப்பு சார்ந்த விளம்பர காணொளி
தற்போதெல்லாம் தயாரிப்பு சார்ந்த விளம்பரங்களின் மூலம்தான் யூடியூப் பதிவர்கள் பெரும்பாலும் பணம் ஈட்டுவதாக இவான் கூறுகிறார்.
இதன்படி, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கு காணொளியை தயாரிக்குமாறு கேட்கும். அதற்கு, பிரதி பலனாக அதிகளவிலான பணம் யூடியூப் பதிவர்களுக்கு வழங்கப்படும்.
"சாதாரண விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணத்தை விட பன்னிரண்டு மடங்கு அதிகமான மாத வருவாயை இது கொடுக்கும். இது கேட்பதற்கு அசாதாரணமாக தோன்றினாலும், இது உண்மைதான்."
"என்னுடைய நண்பர் லூக் என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து 20,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்தது" என்று கூறுகிறார் இவான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: