You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெர்மனி: ஏங்கலா மெர்கல் ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி
ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை தீர்ப்பதற்காகத் தமது கட்சியின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியுடன், அந்நாட்டு அதிபர் ஏங்கலா மெர்கல் பேச்சு நடத்த உள்ளார்.
இடது மையவாத கட்சியான சமூக ஜனநாயக கட்சி மெர்கலின் ஜெர்மன் கிறித்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் தனது கூட்டணியை நீட்டிக்க மறுத்திருந்தது. ஆனால், பிற கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தலால் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெர்கலின் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் முதல் மூன்று முறைகளைப் போல் அல்லாமல் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.
மொத்தமுள்ள 709 இடங்களில் அவரது கட்சி 246 இடங்களை மட்டுமே பெற்றது. ஆட்சி அமைக்க 355 இடங்கள் தேவை. அதனால், செப்டம்பர் முதல் மெர்கல் தலைமையிலான அமைச்சரவை தற்காலிக அமைச்சரவையாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த வாரம் சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடன் மெர்கல் நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மயர் முன்னிலையில் மெர்கல் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் மார்டின் ஸ்கல்ஸ் ஆகியோர் இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மெர்கல் தலைமையிலான சிறுபான்மை அரசு தொடர மார்டின் ஸ்கல்ஸ் ஆதரவு தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி தோல்வி அடைந்தால் பசுமைக் கட்சியுடன் சிறுபான்மை அரசமைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒரு நிலையற்ற சிறுபான்மை அரசுக்குத் தலைமை தாங்குவதை விட, மீண்டும் தேர்தலை சந்திக்கவே விரும்புவதாக மெர்கல் கூறியிருந்தார்.
மீண்டும் தேர்தல் நடந்தாலும், இதே போன்று யாருக்கும் பெரும்பான்மையற்ற முடிவுகளே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏங்கலா மெர்கலின் அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படும் இந்த இழுபறி, மெர்கலை தங்கள் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை உண்டாக்கும் தலைவாராகப் பார்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- அம்மா உணவகத்தை விட ருசியாக இருக்கிறதா இந்திரா உணவகம்?
- எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார்? சம்பவம் நடந்தது எப்படி?
- “மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்”
- ஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா
- நேற்று அதிமுக சின்னம்; இன்று தேர்தல் தேதி: ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்