You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேற்று அதிமுக சின்னம் ஒதுக்கீடு; இன்று தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேதி, அதிமுக-வின் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாள் அறிவிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இரட்டை இலையை ஒதுக்கியது, தேர்தல் தேதி அறிவித்தது இரண்டுமே தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டதால் ஆணையம் சமூக ஊடகத்தில் கடும் கேலிக்கும், விமர்சனத்துக்கும் இலக்காகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு அவரது மரணத்தை அடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிளவுபட்டிருந்த அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம் அப்போது முடக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன் அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிடவிருந்தார். பணம் விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகளைக் காரணம் காட்டி அத்தேர்தலை ஆணையம் ரத்து செய்தது.
இப்போது அரசியல் நிலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, சசிகலாவால் முதல்வராக முன்மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குடும்பத்தினரையே தள்ளிவைத்து ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்ததை அடுத்து, அதிமுக-வின் அதிகாரச் சமநிலையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுநாள் வரை ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படாமலே இருந்துவந்தது.
இந்நிலையில் இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் இன்று ஆணையம் அறிவித்த நிலையில், ஆணையத்தின் முடிவு விமர்சனத்துக்கு இலக்காகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல் அதன் நம்பகத் தன்மையைக் குலைத்துவிட்டதாக பொருள்படும் பதிவுகளை டிவிட்டரில் பலரும் இட்டிருந்தனர்.
தேர்தல் ஆணையம் அதிமுக-வுக்கு இணக்கமாகச் செயல்பட்டிருப்பதாகவும் அதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சித்திரிக்கும் பதிவுகளும் டிவிட்டரில் வெளியாகி இருந்தன. இவ்வளவும் செய்துவிட்டு அதிமுகவை எதிர்த்து பாஜக வேட்பாளர் நிறுத்தும் என்று கேலி செய்து ஒரு பயனாளரும், மற்றொருவர் அதிமுக சின்னமான இரட்டை இலையின் காம்பில் தாமரை பூத்திருப்பதாக சித்திரித்தும் இன்னொரு பதிவரும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.
ஒரு சில அதிமுக ஓபிஎஸ். இபிஎஸ் அணித் தொண்டர்கள் இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்கள்.
சின்னத்தை ஓபிஎஸ் இபிஎஸ் அணிக்கு ஒதுக்கும் முடிவை வரவேற்று ஒரு தொண்டர் இட்ட முகநூல் பதிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்