You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்: நடத்தியது யார்? நடந்தது எப்படி?
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார்.
பிர் அல்-அபெட் நகரில் உள்ள அல்-ரவுடா மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
எதிராளிகளை இலக்கு வைத்து அருகில் உள்ள மலைகளில் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்த மிக மோசமான இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எதிப்தின் பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் நடந்துள்ள மோசமான தாக்குதலுக்கு இக்குழுவினரே பின்னணியில் இருந்துள்ளனர்.
இக்குழுவினர் வழக்கமாக கிருஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், தற்போது மசூதியில் நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் எகிப்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
''தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடும் நமது நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சியாகவே இது நடந்துள்ளது'' என தாக்குதலுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி கூறினார்.
மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
என்ன நடந்தது?
டஜன் கணக்கான துப்பாகிதாரிகள், வாகனத்தில் மசூதியைச் சூழ்ந்து நின்று வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் தப்பித்து சென்றவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.
மசூதிக்குச் செல்லும் வழியை முடக்க, மசூதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்க வந்த ஆம்புலன்ஸை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
நவீன எகிப்து வரலாற்றில், இது மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. பிர் அல்-அபெட், கெய்ரோவில் இருந்து 211 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்