கலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்

ரன்ச்சோ தெஹாமா பள்ளி

பட மூலாதாரம், Getty Images

செவ்வாய்க்கிழமை, கலிஃபோர்னியா வின் புறநகர் பகுதியில், துப்பாக்கி ஏந்திய நபரால், நான்கு பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர், அங்குள்ள பள்ளியை நோக்கி சுட்டார். ஆனால், அந்த நபர் பள்ளிக்குள் நுழைய முடியாமல் ஆசிரியர்களால் தடுக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அருகாமையில் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டவுடன், ரன்ச்சோ தெஹாமா பள்ளியின் அனைத்து கதவுகளும் ஆசிரியர்களால் முழுமையாக மூடப்பட்டது.

கணக்கில்லாத உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்களின் செயலை காவல்துறை வெகுவாக பாராட்டியுள்ளது.

துப்பாக்கிதாரி சுட்டதில் ஒரு குழந்தை மட்டும் சுடப்பட்டுள்ளதாகவும், மற்ற குழந்தைகள் உடைந்த கண்ணாடிகளாக காயமடைந்துள்ளதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

43 வயதான கெவின் நீல் என்ற அந்த நபர், ஒரு வாகனத்தை திருடியது மட்டுமின்றி, பிறரை சுட்டதோடு தன்னையும் சுட்டுகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை, சேக்ரமெண்டோவிலிருந்து 195 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரான்சோ தெஹாமா என்ற பகுதியில், பக்கத்துவீட்டுக்காரருடன் நடந்த சண்டையால் இந்த துப்பாக்கி தாக்குதல் துவங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

சண்டை பெரியதானதை தொடர்ந்து, விசித்திரமாகவும், கொலைவெறியுடனும் மாறிய கெவின், தனது பக்கத்துவீட்டுக்காரரை கொன்றுள்ளார் என்று காவல்துறை நம்புகிறது.

துப்பாக்கிதாரி, ஏற்கனவே சட்ட அமலாக்கத்துறையுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

`பைத்தியக்காரர்`

ஒரு தானியங்கி துப்பாக்கியும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கிறது.

வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினர்

பட மூலாதாரம், Getty Images

அவர் சீரற்ற வகையில் சுட்டுள்ளார் என்றும், பள்ளியின் மீது சுட்ட அவர், ஆசிரியர்கள் பள்ளியை பூட்டிவிட்டதை தெரிந்து ஆத்திரமடைந்தாவக்வும், ஆறு நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தையை பள்ளியில் விடவந்த தாய் ஒருவர் இந்த தாக்குதலில் காயமடைந்ததால், சம்பவம் குறித்து உடனடியாக பள்ளிக்கு தகவல் கொடுத்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை.

காலிலும், மார்பு பகுதியிலும் குண்டுகளால் தாக்கப்பட்ட குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடிகள் உடைந்ததால் காயமடைந்த மற்ற குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

`இந்த துப்பாக்கிதாரி, சீரற்ற முறையில் மக்களை சுட்டுள்ளார். இந்த சம்பவம் என்பது, மிகவும் வருத்தமானதாக இருந்தாலும், இதைவிட மோசமானதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நான் கூறுவேன்` என்றார் காவல்துறை அதிகாரி ஃபில் ஜான்ஸ்டன்.

காவல்துறையினர்

பட மூலாதாரம், Getty Images

`தி ரெட்டிங் டெக்கார்ட் சர்ச்லைட்` என்ற பத்திரிக்கை, துப்பாக்கிதாரியின் அருகாமை வீட்டில் உள்ளேன் என்று குறிப்பிட்ட ஒருவரிடம் பேசியுள்ளது.

பிரைன் ஃபிலிண்ட் என்ற அந்த நபர், ` பிற்காலங்களில் கெவின் துப்பாக்கிகளால் அதிகமாக சுடத்துவங்கினார். பல தோட்டாக்களால் சுட்டார்` என்றார்.

`நாங்கள் காவல்துறையிடம், இவர் ஒரு பைத்தியக்காரர் என்றும், தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தோம் ` என்று கூறியுள்ளார்.

கெவினின் தாய் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண்மணியிடம் ஏ.பி செய்தி நிறுவனம் பேசியுள்ளது. `நான் ஒரு உச்சியில் உள்ளேன். தற்போது செல்வதற்கு வழியே இல்லை` என்று கெவின் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கெவினுக்கு, நீண்ட காலமாக அருகாமை வீட்டாருடன் சண்டை இருந்ததாகவும், அவர்கள் போதைப்பொருள் சமைப்பதாக அவர் நம்பியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்தார்.

துப்பாக்கிதாரியின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கும் வரையில் அவர் யார் என்ற அடையாளத்தை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.

இன்று தெஹாமாவில் நடந்த சம்பவத்தை கேட்டு தானும், தன் மனைவியும் மிகவும் துயரம் அடைந்ததாக, காலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

`அன்பிற்குறியவர்களை இழந்தவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். உங்களின் வருத்தத்தில் கலிஃபோர்னியா ஒன்றிணைகிறது`

டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள துணை அதிபர் மைக் பென்ஸ், `வடக்கு கலிஃபோர்னியாவில் நடந்த தாக்குதலை அறிந்து வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அதிலும் குழந்தைகள் உள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது` என பதிவிட்டுள்ளார்.

`சட்ட அமலாக்கத்தூறை இன்னும் துரிதமாக செயலாற்ற நாங்கள் கட்டளையிட்டுள்ளோம். சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, தேவையான உதவிகளையும் செய்துவருகிறோம். காயமைடைந்தவர்கள் குணமடைய பிராத்திக்கிறோம் ` என்று தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, லாஸ் வேகஸ் துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு நிமிடங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :