You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான்-இராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 207 பேர் பலி
இரான்-இராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
மேற்கு இரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அரசு ஊடகத்திடம் தெரிவித்தனர். 2,500 பேர் காயமடைந்துள்ளனர்.
இராக்கில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர், எல்லைப்பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்போல்-இ சஹாப் நகரில் இருந்ததாக இரானின் அவசர சேவைகளின் தலைமைத் தலைவர் பிர் ஹூசைன் கூலிவந்த், அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆர்ஐஎன்என் (IRINN) தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
நிலச்சரிவால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுமார் எட்டு கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் ரெட் க்ராஸ் அமைப்பின் தலைவர் மொர்டேசா சலீம் தெரிவித்துள்ளார்.
மேலும் சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் (30 கி.மீ.) தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியது.
33.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, இஸ்ரேல் மற்றும் குவைத்திலும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்