You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனித இனம் பரிணமித்தது இதிலிருந்துதானா?: புதிய புதைபடிவம் கண்டுபிடிப்பு
- எழுதியவர், ஹெலன் ப்ரிக்ஸ்
- பதவி, பிபிசி
மனித இனம் உட்பட வாழும் பாலூட்டிகளின் ஆதி முன்னோர்களின் புதைபடிவம் தெற்கு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர்களுடன் இருந்து இப்போது அழிந்துவிட்ட சிறிய பாலூட்டிகளின் பற்கள் டொர்செட் கடற்கரையில் கண்டறியப்பட்டன.
இந்த வகைமாதிரியை அடையாளம் கண்ட ஆராய்ச்சியாளர்கள், பாலூட்டிகளில் மனித இனம் பரிணமித்த கிளையின் ஆரம்பமாக இவற்றை அங்கீகரிக்கிறார்கள்.
இந்த புதைபடிவங்கள் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
"ஜுராஸிக் கடற்கரை பகுதியில், இரண்டு மூஞ்சுறு போன்ற பொருளை கண்டுபிடித்தோம். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவைதான் நம் ஆதி முன்னோர்கள்" என்கிறார் பழமையான பற்களை ஆய்வு செய்த பொர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவ் ஸ்வீட்மேன்.
சிறிய, மென்மையான ரோமங்கள் உடைய இந்த பாலூட்டிகள் இரவு நேரங்களில் இயங்குபவையாக இருந்திருக்ககூடும்.
இவை மண்ணை தோண்டி, பூச்சிகளை உண்ணும் உயிரினமாக இருந்திருக்க வேண்டும். இந்த உயிரினத்திலேயே பெரியவகை செடிகளை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.
இந்த உயிரினத்தின் பற்கள் மேம்பட்டவையாக இருக்கின்றன. அந்த பற்களால் தனக்கான உணவை துளைத்து, வெட்டி, நசுக்க முடிந்திருக்கிறது.
"மற்ற உயிரினங்களை சூறையாடும், ஊறு விளைவிக்கும் டைனோசர்களுடன் இது தன் வாழ்விடத்தை பங்கிட்டு இருக்கிறது. அது சாதாரண விஷயம் அல்ல" என்கிறார் டாக்டர் ஸ்வீட்மேன்.
ஆச்சர்யம் அளிக்கும் ஜூராஸிக் கடற்கரைபகுதி
இதன் புதைபடிவங்கள் முன்னாள் இளங்கலை மாணவர் கிராண்ட் ஸ்மித்தால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுவானிஜ் அருகே உள்ள டஸ்டன் கடற்கரைபகுதியில் சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை சலித்தெடுக்கும்போது, அதிலிருந்து பற்களை கண்டுபிடித்துள்ளார்.
"இந்த ஜூராஸிக் கடற்கரை பகுதி எப்போதும் நமக்கு ஆச்சர்யம் அளிக்கும் ஒன்று. அது பல ரகசியங்களை நமக்கு சொல்லி, நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது," என்று இந்த ஆய்வை மேற்பார்வை செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவ் மார்டில் கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு புதைபடிவங்களில், ஒன்றிற்கு ட்ல்ஸ்டோதேரியம் நியூமணி என்று இந்த புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சார்லி நியூமென் பெயரை வைத்திருக்கிறார்கள்.
புதிய பாலுட்டி படிமத்துக்கு டல்ஸ்டோன் என்சோமி, என்று உள்ளூர் புதைபடிமவியல்துறை நிபுணர் பௌல் என்சோம் பெயரை வைத்திருக்கிறார்கள்
அண்மையில் சீனாவில் கணடறியப்பட்ட புதைபடிவங்கள், ஆதி பாலூட்டிகள் 160 மில்லியன் ஆண்டுகள் முந்தையது என்று கூறியது.
ஆனால், இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், இந்த தரவு மூலகூறு ஆய்வை அடிப்படையாக கொண்டவை.
இன்னொரு ஆய்வு, ஆதி பாலூட்டிகள் இரவில் மட்டும் இயங்கி இருக்கிறது. டைனோசர் இனம் அழிந்தப்பின் தான் அவை பகலில் செயல்பட தொடங்கி இருக்கிறது என்று கூறியது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்