''செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; விரைவில் நாடு திரும்புவேன்''- லெபனான் பிரதமர்

லெபனான் பிரதமர்

பட மூலாதாரம், Reuters

தனது பதவி விலகலை முறையாக சமர்ப்பிக்க, ஓரிரு நாட்களில் லெபனான் திரும்ப உள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி கூறியுள்ளார். தனது நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்

கடந்த வாரம் தனது பதவி விலகலை அறிவித்ததில் இருந்து, முதல் முறையாகப் பொதுவெளியில் தோன்றி இதனைக் கூறினார்.

சாத் ஹரிரி செளதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. ஆனால், அதனை அவர் மறுத்துள்ளார்.

தான் மற்றும் தனது குடும்பத்தின் பாதுகாப்பை குறிப்பிட்டுப் பேசிய அவர், தனது பதவி விலகலுக்கு இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பே காரணம் என குற்றஞ்சாட்டினார்.

தங்களின் மோதலுக்கு லெபனானை களமாகப் பயன்படுத்தக்கூடாது என பிற நாடுகளை அமெரிக்காவும், பிரிட்டனும் எச்சரித்துள்ளன.

லெபனான் பிரதமர்

பட மூலாதாரம், AFP

இந்நிலையில்,சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுன்னி முஸ்லிம் தலைவரும், தொழிலதிபருமான சாத் ஹரிரி லெபனானில் ஆட்சி அமைக்க, அதிபர் மைக்கேல் அவுனால் நவம்பர் மாதம் 2016-ம் அண்டு பரிந்துரைக்கப்பட்டார்.

''நான் பதவி விலகிவிட்டேன். விரைவில் லெபனான் சென்று, முறையாகப் பதவி விலகலை சமர்ப்பிப்பேன்.'' என தொலைக்காட்சி பேட்டியில் தற்போது சாத் ஹரிரி கூறினார்.

சாத் ஹரிரியை செளதி அரேபியா பிணையக்கைதியாக வைத்திருப்பதாக இரானும், ஹெஸ்புல்லா அமைப்பும் குற்றஞ்சாட்டிய நிலையில்,''நான் இங்குச் சுதந்திரமாக இருக்கிறேன். நாளைப் பயணம் செய்ய வேண்டும் என நினைத்தால் என்னால் முடியும்'' என அவர் கூறினார்.

அரபு நாடுகளில் இரான் தலையிடுவதே இந்தப் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பிரச்சனை என சாத் ஹரிரி கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :