You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம் கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ.
அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நான்காவது முறையாக இத்தகைய கோப்புகளின் தொகுதி வெளியிடப்படுகிறது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பின் லேடன் இறந்த பிறகு இந்தக் கணினி கைப்பற்றப்பட்டது.
சில கோப்புகள் பாதுகாப்பு காரணங்களாலோ அல்லது சிதைந்திருப்பதாலோ அல்லது ஆபாசமாக இருப்பதாலோ வெளியிடப்படவில்லை என்று சிஐஏ தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள 18,000 ஆவணங்கள், 79,000 ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட காணொளிகளும் "பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை" வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சிஐஏவின் இயக்குனர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
பின் லேடனின் மகன் ஹம்சா குறித்து தெரியவந்துள்ள தகவல்கள் என்னென்ன?
பின் லேடனின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ஹம்சாவின் திருமண காணொளியும் தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளிகளுள் அடக்கம். ஹம்ஸா அல் கொய்தாவின் எதிர்கால தலைவராகத் கருதப்படுகிறார். காணொளியை பகுப்பாய்வு செய்ததில் அது இரானில் எடக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு ஹம்சாவின் இளமைக்கால காணொளிகளே பொதுவெளியில் வந்துள்ளன.
பின்லேடன் அந்த காணொளியில் காணப்படவில்லை. ஆனால், திருமண வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர், "முஜாஹிதீன்களின் இளவரசனான அவரது தந்தை இத்திருமணத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது மகிழ்ச்சி அனைத்து முஜாஹிதீன்களுக்கும் பரவும் என்று குறிப்பிட்டுள்ளார்," என ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்த காணொளியில் மற்ற மூத்த அல் கொய்தா புள்ளிகளும் காட்சியில் காணப்படுவதாக புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளை பகுப்பாய்வு செய்யும் ஃபவுண்டேஷன் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் டெமாக்ரசீஸ் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1981 ல் எகிப்திய தலைவர் அன்வர் சதாத்தை கொன்றவரின் சகோதரரான முகமது இஸ்லம்பூலியும் அதில் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அண்மை காலமாக ஹம்சா பின் லேடன் அமெரிக்காவை மிரட்டும் வகையிலான ஒலிப்பதிவுகளை அல் கொய்தா வெளியிட்டது. அதில் சௌதி அரசாங்கத்தை வீழ்த்தவும், சிரியாவில் ஜிகாதிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் ஆண்டு விழாவில் ஹம்சாவின் சிறுவயது புகைப்படம் நியூ யார்க் உலக வர்த்தக மையத்தின் முன்பு இருப்பதை போன்ற புகைப்படமொன்று வெளியிடப்பட்டிருந்தது.
பின் லேடனின் காணொளி பதிவுகளில் என்னென்ன உள்ளது?
பின் லேடனின் காணொளி பதிவுகளில் அன்ட்ஸ், கார்ஸ், சிக்கி லிட்டில் மற்றும் தி மஸ்கடியர்ஸ் போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் இருந்தன.
பிரிட்டனில் வைரலான "சார்லி பிட் மை ஃபிங்கர்" என்னும் காணொளி மற்றும் பல யூடியூப் காணொளிகளும் இருந்தன. பிரபல கம்ப்யூட்டர் விளையாட்டான ஃபைனல் பேண்டஸி VII இருந்தது.
பின் லேடன் அவரைப் பற்றிய மூன்று ஆவண படங்களின் பிரதிகளை வைத்திருந்தார். மேலும், நேஷனல் ஜியோகிராஃபியின் ஆவணப்படங்களும் இருந்தன.
அல்கொய்தா தலைவர் தனது குடும்பத்தினர் பலருடன் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட வீட்டில் வாழ்ந்தார். பின் லேடனின் மகன், தூதுவர் இருவர் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
மற்ற ஆவணங்கள் கூறுவதென்ன?
பின் லேடன் கைப்பட எழுதிய 228 பக்கங்கள் குறிப்பில் அவர் எதிர்பார்த்திராத 2011ம் அரேபிய எழுச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி எழுதப்பட்டிருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த ஆவணங்கள் பின் லேடன் தான் இறக்கும்வரை உலகம் முழுவதும் உள்ள அல் கொய்தாவின் உறுப்பினர்களுடன் சாதாரண தொடர்பில் இருந்ததை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்காவின் திட்டங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்த பின் லேடன், புலனாய்வு பத்திரிகையாளரான பாப் உட்வார்ட்டின் புத்தகமான 'ஒபாமாஸ் வார்ஸ்' என்பதன் மொழிபெயர்ப்பையும் வைத்திருந்தார்.
ஈரானுடனான அல்-கொய்தாவின் உறவை பற்றி அதன் மூத்த உறுப்பினர் எழுதிய மற்றொரு ஆவணம் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் இருவரின் எதிரியும் அமெரிக்கா என்பதால் அவர்களுக்கிடையில் பொது ஆர்வங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாக அந்த ஆய்வு அமைப்பு குறிப்பிடுகிறது.
இரான் குறைந்தபட்சம் 2009யிலிருந்து அல் கொய்தாவின் நிதியையும், உறுப்பினர்களையும் தங்கள் நாட்டின் வழியாக தெற்காசியா மற்றும் சிரியாவுக்கு பயணப்பட்டு செல்ல உதவியதாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை தெரிவித்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் பின் லேடனின் அல் கொய்தாவிற்கும், புதிதாக தற்போது உருவெடுத்துள்ள இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக் கொள்ளும் அமைப்புக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான வேறுபாடுகளைப் பற்றியும் அல் கொய்தாவிற்குள்ளேயே யுத்த தந்திரம் குறித்து நிலவிய மாற்றுக்கருத்துகள் குறித்தும் தெரிந்துகொள்ள உதவுவதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்