You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் 30 செ.மீ. மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைவர் அலுவலக பகுதியில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. மாலை 6 மணியளவில் பெய்யத்துவங்கிய மழையானது அதிகாலைவரை தொடர்ந்து பெய்தது.
இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் சூழ்ந்தது. வடசென்னையின் பல பகுதிகளும் தென்சென்னையின் சில பகுதிகளிலும் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக வடசென்னையின் வியாசர்பாடி, கொடுங்கையூர், தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கெங்கிரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதை ஆகிய இரண்டு சுரங்கப்பாதைகளில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
இந்த கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தனியார் அலுவலங்கள் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்தபடியே வேலைசெய்ய அனுமதிக்க வேண்டுமென மாநில அரசு அறிவுறுத்தியது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில்வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், " தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகத்தில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றவுத்தத் தாழ்வு பகுதி, அதே இடத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்" என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியில் சில முறை கனமழை பெய்ய வாய்ப்புண்டு என்றும் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு: சத்யபாமா பல்கலைக்கழகம் 20 செ.மீ., தரமணி 19 செ.மீ., நுங்கம்பாக்கம் 18 செ.மீ., பரங்கிப்பேட்டை, மீனம்பாக்கம், சீர்காழி 14 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 13 செ.மீ., தாம்பரம் 12 செ.மீ., மகாபலிபுரம் 11 செ.மீ., கோடம்பாக்கம், சிதம்பரம், மாதவரம், ரெட்ஹில்ஸ், எண்ணூர் 8 செ.மீ.
தற்போது மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. அதேபோல, விமான சேவையிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் எதுவும் நிரம்பவில்லையென்றும் அது தொடர்பாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரி 20 சதவீதமும் பூண்டி ஏரி 10 சதவீதம் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் கொடுங்கையூரில் மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிதித்துத் தரவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கிரியப்பா சாலையில் இளைஞர் மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டத்தில் மணலகரம் என்ற ஊரில் வயிலில் தேங்கியிருந்த நீரை அகற்றச் சென்றபோது, அறுந்துகிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் ஒருவர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்