You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதிரிபாக பற்றாக்குறை: சிக்கலில் பிரிட்டன் போர்க் கப்பல்கள்?
பிரிட்டன் கடற்படையின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் உதிரிபாகங்கள் பற்றாற்குறை ஏற்பட்டதால் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்ற கப்பல்களிலிருந்து உதிரிபாகங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக தேசிய தணிக்கை அலுவலகம் கண்டறிந்துள்ளது.
"மற்ற கப்பல்களில் இருந்து உதிரிபாகங்களை எடுப்பது" கடந்த ஐந்தாண்டுகளில் 49% அதிகரித்துள்ளதாக தணிக்கை அலுவலகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செயல் முறையானது பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மில்லியன்கணக்கான பவுண்டுகள் செலவையும் மற்றும் கட்டமைப்பில் காலதாமதத்தை ஏற்படுத்தியதாக தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
"மிகவும் தேவையான" சமயங்களில் மட்டுமே பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரிட்டனிடம், 19 போர்க் கப்பல்கள் மற்றும் ஏழு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ஆனால் சில நேரங்களில் அவை கடலுக்கு செல்லத் தேவையான உதிரிபாகங்கள் இருப்பதில்லை.
மூன்றாவது அஸ்டுட் ரக நீர்மூழ்கி கப்பலான 'எச்எம்எஸ் ஆர்ட்ஃபுல்'லினை கட்டும்போது அதன் உதிரிபாகங்கள் எடுக்கப்பட்டதால் கப்பல் கட்டுவது 42 நாட்கள் தாமதமானதுடன், ஒட்டுமொத்த உற்பத்தி தொகையில் 5 மில்லியன் பவுண்டுகள் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கம்பிரியாவில் உள்ள பர்ரோவில் கட்டப்பட்ட இந்த கப்பல் தனது முதல் சோதனை ஓட்டத்தை 2014ல் நிறைவு செய்தது.
அதி தீவிர நடவடிக்கைகள்
கடந்த ஆண்டு, ஒரு கப்பலில் இருந்து உதிரி பாகங்களை அகற்றி மற்றொரு கப்பலில் பொருத்துவது போன்ற 795 சம்பவங்கள் நடந்தது. 2005 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 30 முறை நடந்த இந்த உதிரி பாக பறிமாற்றம், கடந்த ஆண்டு மாதத்துக்கு 66 என்று உயர்ந்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் கண்டறிந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 3,230 தருணங்களில் 6,378 உதிரிபாகங்கள் மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில சூழ்நிலைகளில், அதாவது அதி தீவிர செயல்பாட்டின் போது, உதிரிபாகங்களை மாற்றி கொள்வதுதான் கடலில் கப்பல்களை செயல்படவைப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும் என்று தணிக்கை வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
உதிரி பாகங்கள் பிரித்தெடுப்பால் ஏற்படுத்திய பிரச்சனையினால் தற்போது உற்பத்தியில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் உற்பத்தி செலவு சுமார் 40 மில்லியன் பவுண்டுகள் வரை அதிகரித்திருப்பதை பாதுகாப்பு அமைச்சகமே அடையாளம் கண்டுள்ளதாக தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடல்வழி பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் செயற்பாட்டை சரியாக கவனிக்காதது ஆகியவை இப்பிரச்சனைக்கு காரணமென தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
"கடந்த இரண்டாண்டுகளில், கடல்வழி பாதுகாப்புக்கு அளிக்கப்படும் நிதியுதவியில் இருந்து சுமார் 92 மில்லியன் பவுண்டுகளை கடற்படை குறைந்துள்ளதாக" அந்த அறிக்கை தெரிவிக்கிறது,
உதிரிபாகங்கள் மாற்றுவதிலிருந்து வரும் பாகங்களில் 0.5 சதவீதத்துக்கு குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மிகவும் அத்தியாவசியமான சூழ்நிலையில் கப்பல்கள் துறைமுகத்திலிருந்து விரைவாக வெளியேறுவதற்காக மட்டுமே இதை மேற்கொள்ளவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
"இந்த நீண்ட கால நடைமுறையை நிர்வகிப்பதை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்