You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
போதை மருந்து விவகாரம் ஒரு தேசிய அவசர நிலை: டிரம்ப்
போதை மருந்துகள் மற்றும் வலி நீக்கி மருந்துகளுக்கு அமெரிக்க மக்கள் மேலும் மேலும் அடிமைப்பட்டு வரும் விவகாரம் ஓர் அவமானம் என்றும் ஒரு தேசிய 'அவசரநிலை' என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 140 அமெரிக்கர்கள் இந்தப் பழக்கத்தால் கொல்லப்படுவதாகக் கூறிய அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு திட்டத்தையும் அறிவித்தார். இதன் விளைவாக சில மருந்துகள் ஒரு வாரத்துக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுவதற்கும், சில மருந்துகளை சந்தையில் இருந்தே விலக்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கும்.
சிரியா ரசாயன தாக்குதல் நடத்தியது உண்மை: ஐ.நா. அறிக்கை
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் எதிரணிப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள கான் ஷேக்கொன் நகரில் ஏப்ரல் 4ம் தேதி செரின் என்னும் ரசாயனப் பொருள் அடங்கிய ரசாயன குண்டை பயன்படுத்தியதாக ஐ.நா. அறிக்கை ஒன்று உறுதி செய்துள்ளது.
விமானத்தில் இருந்து வீசப்பட்ட இந்த குண்டினால் 80 பேர் இறந்தனர். "எங்களுக்கு நீண்ட நாள்களாகத் தெரிந்த உண்மையை இந்த அறிக்கை உறுதி செய்துள்ளது" என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு புணையப்பட்டது என்று அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத்தும் ரஷியாவும் கூறி வந்தன.
கென்யா தேர்தலில் 48 சதவீத வாக்குப் பதிவு
சர்ச்சைகளுக்கு இடையில் வியாழக்கிழமை நடந்த கென்ய அதிபர் பதவிக்கான மறு தேர்தலில் 48 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டில் நடந்து பிறகு பெருமளவிலான முறைகேடுகள் நடந்தன என்ற புகாரின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட தேர்தலில் 80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். எனவே, தேர்தலைப் புறக்கணிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா விடுத்த வேண்டுகோளுக்கு பெருமளவிலான மக்கள் செவி சாய்த்துள்ளார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது.
தென்கொரிய மீனவர்களை விடுவிக்க வடக்கு ஒப்புதல்
சட்டவிரோதமாக தமது கடற் பகுதியில் சனிக்கிழமை நுழைந்த தென்கொரிய மீன்பிடிப் படகின் ஊழியர்களை சில மணி நேரங்களில் விடுவிக்க வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது.
மீனவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும், மன்னிப்பைக் கோரியதாகவும் வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்தது. வடகொரியாவும், தென் கொரியாவும் அவ்வப்போது பரஸ்பரம் தத்தமது கடற்பரப்புக்குள் வந்துவிடும் மாற்று நாட்டு மீனவர்களை சிறைபிடிப்பது வழக்கம். ஆனால், இப்போது இருப்பதைப் போல இரு நாட்டு உறவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மீனவர்களை விடுதலை செய்வது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
ஐ.எஸ். பிடியில் உள்ள கடைசி பகுதி மீது தாக்குதல்
ஐஎஸ் படையினரின் பிடியில் உள்ள கடைசி பகுதியான அல்-காய்ம் மீது இராக்கியப் படையினர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
இராக்கின் சிரியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள யூப்ரேட்ஸ் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள அல்-காய்ம் மற்றும் ராவா ஆகிய பகுதிகள் மீதான இத் தாக்குதலில் இராக் படையினர், போலீசார், சுன்னி பழங்குடியினர், ஷியா துணை ராணுவப் படையினர் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். "சாவதா அல்லது சரணடைவதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்," என்று ஐஎஸ் படையினரை இராக் பிரதமர் எச்சரித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :