You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா?
மறைந்த அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலை தொடர்பான கோப்புகளை வெளியிட அனுமதிக்கும் திட்டமுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ` மேற்கொண்டு கிடைக்தகும் தகவல்களைப் பொறுத்து ` இவற்றை திறக்க அனுமதிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோப்புகள் அக்டோபர் 26ஆம் தேதி, அமெரிக்க தேசிய காப்பகத்தால் திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதன் காலத்தை நீட்டிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.
கடந்த 1963 ஆம் ஆண்டு, டெக்சாஸின் டாலஸ் பகுதியில், கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேசிய காப்பகம், இந்த கொலை தொடர்பான பெரும்பாலான கோப்புகளை ஏற்கனெவே வெளியிட்டுவிட்ட நிலையில், கடைசிகட்ட கோப்புகள் மட்டும், இன்னும் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
`மேலும் தகவல்களை பெரும் பொருட்டு, அதிபர் என்ற முறையில், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த கென்னடியின் கோப்புகளை திறக்க நான் அனுமதிப்பேன்` என்று டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு, அமெரிக்க காங்கிரஸ், ஆவணங்கள் வெளியிடப்படும் தேதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவையாக இருக்குமென்றால், அதிபர் கென்னடி குறித்த ஆவணத்தை 25ஆண்டுகளில் வெளியிடலாம் என தெரிவித்துள்ளது.
இந்த காப்பகம் வெளியிடப்படாத மூன்று ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் கொண்டுள்ளது. இதற்கு முன்பு முப்பது ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை அதிபர் மொத்தமாக வெளியிடுவாரா அல்லது தொகுப்பாகவா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
`வாஷிங்டன் போஸ்ட்` பத்திரிக்கையின் அறிக்கைப்படி, கென்னடி கொலை குறித்த நிபுணர்கள், கடைசிகட்ட ஆவணங்களில், அவரின் கொலைகுறித்த பெரிய ஆச்சரிய தகவல்கள் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், கொலைக்கு முன்பாக, மெக்சிகோ நகரில் ஆஸ்வோல்ட்டின் நடவடிக்கைகள் குறித்து இந்த கோப்புகள் கூறலாம்.
கொலை நடந்த அன்றே டாலஸில் ஆஸ்வோல்ட் கைது செய்யப்பட்டார். கொலை செய்ததை மறுத்த அவர், தன்னை ஒரு பலிகடா என குறிப்பிட்டார்.
காவல்துறையின் விசாரணையில் இருந்த போதே, ஆஸ்வோல்ட் அங்குள்ள இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபியால் கொல்லப்பட்டார். கென்னடியின் கொலையே, அமெரிக்க வரலாற்றின் மிகவும் சக்திவாய்ந்த சதி கோட்பாடாக உருவாகியது.
`அமெரிக்க மக்கள் உண்மையை அறியும் தகுதியை பெற்றுள்ளனர். குறைந்தபட்சம், இத்தனை ஆண்டுகளாக அரசு எதை மறைத்து வைத்தது என்பதையாவது அவர்கள் அறியும் தகுதி பெற்றுள்ளனர்` என்று கென்னடி குறித்த புத்தகம்எழுதியவரும், வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின், அரசியல் பிரிவின் இயக்குநரான லாரி சபடோ ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்