இஸ்லாமிய முறைக் கல்வியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் செளதி அரேபியா

முகமது நபிகளின் போதனைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக பிரசார அமைப்பு ஒன்றை ஏற்படுத்த செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மதீனாவில் ஒரு மத அமைப்பை உருவாக்க செளதி அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இந்த அமைப்பில் உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமிய நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.

இஸ்லாமிய கல்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்படலாம் என்பதால், இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செளதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சட்டங்களில் தலையாயதாக குரான் கருதப்படுகிறது. திருக்குரானில் உள்ளவை அனைத்தும் முஹம்மது நபிக்கு கடவுள் சொல்லியவை என்று நம்பப்படுகிறது.

அடுத்ததாக, இஸ்லாமிய சட்டங்களின் இரண்டாவது ஆதாரமாக, நபிவழி அல்லது ஹதீஸ் கருதப்படுகிறது. இது, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிகாட்டல்களில் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

ஹதீஸுக்கு பல அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் சொந்த புரிதலுக்கேற்ப விளக்கமளித்துள்ளனர்.

அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் தீவிரவாத குழு போன்றவை இஸ்லாமிய கோட்பாடுகளில் இருந்து சிலவற்றை மட்டும் எடுத்து உதாரணம்காட்டி, அவற்றை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

செளதி அரேபியாவின் இந்த முன்முயற்சி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இஸ்லாமிய சமயத்தின் புனிதத்தலங்கள் இரண்டும் செளதி அரேபியாவில் அமைந்திருக்கின்றன.

புதிய அமைப்பு எந்த விதத்தில், எந்த தளத்தில் செயல்படும் என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :