You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு
இரான் அணு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் வழங்க மறுத்திருந்தாலும், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் உள்பட உலகின் சக்திமிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தப்போவதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் "எங்கள் பொதுவான தேசிய பாதுகாப்பு நலன் சார்ந்தது" என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பதிலளித்துள்ளன.
"நடைமுறையில் இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை "எந்த தனியொரு நாட்டாலும் நிறுத்திவிட முடியாது" என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
"அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்று இரான் அதிபர் ஹசான் ரூஹானி தெரிவித்துள்ளார்.
"ஒரு அதிபர் பலதரப்பு ஒப்பந்தம் ஒன்றை செல்லுபடியாகாது என்று தாமாக அறிவிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ஓர் இருதரப்பு ஒப்பந்தமாக இது இல்லை என்பது அவருக்கு தெரியவில்லை என்றே தோன்றுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஜெர்மனி, சீனா என சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த 6 நாடுகளுக்கும் இரானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, இரான் தன்னுடைய அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக இரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை ஆற்றிய ஆவேசமான உரையில், இரான் பயங்கரவாத்த்திற்கு துணைபோகிறது என்றும் அங்கு நடப்பது (மத)வெறி ஆட்சி என்றும் குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், புதிய தடைகளை முன்மொழிந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு ஏற்கெனவே மீறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
"முடிவில் அதிக வன்முறை, அதிக பயங்கரம் நிறைந்ததாக இருக்கும் என கணிக்கத்தகுந்த பாதையில், இரான் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இட்டுச்செல்லும் பாதையில் தொடரப்போவதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை முழு இணக்கத்தோடு இரான் கடைபிடித்து வருவதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் பேசிய பின்னர் இதுவரை சீனா எதுவும் தெரிவிக்கவில்லை.. ஆனால், இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்கவேண்டும் என்று அது முன்னதாக அமெரிக்காவை கேட்டு கொண்டுள்ளது.
டிரம்பின் இந்த முடிவு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் செயல்படுவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்