You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்டார்டிகாவில் கொத்துக்கொத்தாக செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்
கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள அடேலி வகை பென்குயின்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பில், இந்த இனப்பெருக்க காலத்தில் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளதை 'பேரழிவு' என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அளவுக்கும் அதிகமான பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் நீண்ட தூரம் கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், உணவு கிடைக்கத் தாமதமாகி பட்டினியால் அந்த இளம் குஞ்சுகள் இறந்துள்ளன.
இதே போல கடந்த 2015-ஆம் ஆண்டின் இனபெருக்க காலத்தில் பிறந்த அடேலி பென்குயின் குஞ்சுகளில் ஒன்று கூட பிழைக்காமல் அனைத்தும் உயிரிழந்தன.
சுமார் 36,000 பென்குயின்கள் வசிக்கும் அந்த பென்குயின் குடியிருப்பில் கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அந்தப் பகுதிகளில் இறால் வகை மீன்கள் பிடிக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அங்கு பென்குயின்களுக்கு உணவுக்கான போட்டி குறைந்து அவை உணவு தேடி நீண்ட தூரம் செல்வது குறையும் என்றும் அதனால் அடேலி வகை பென்குயின்கள் உள்பட அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்படும் என்று வோர்ல்டு வைடு ஃபண்ட் ஃபார் நேச்சர் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பென்குயின்களின் எண்ணிக்கையை கண்காணித்து வரும் பிரெஞ்சு அறிவியலாளர்களின் குழுவுக்கு அந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.
25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள கமிஷன் ஃபார் தி கன்சர்வேஷன் ஆஃப் அண்டார்டிக் மரைன் லிவிங் ரிசோர்சஸ் அமைப்பு வரும் திங்களன்று நடத்தவுள்ள கூட்டத்தில் இந்தத் தடை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
"பென்குயின்களைப் பற்றி பலரும் கொண்டுள்ள கருத்துக்கு மாறானதாக இந்த மோசமான நிகழ்வு அமைந்துள்ளது," என்று வோர்ல்டு வைடு ஃபண்ட் ஃபார் அமைப்பின் துருவத் திட்டங்களுக்கான தலைவர் ரோட் டவ்னி கூறியுள்ளார்.
அடேலி பென்குயின்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மோசமான இனப்பெருக்க காலத்தை சந்தித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் பென்குயின்களின் உணவாக உள்ள இறால் வகை மீன்களைப் பிடிப்பதை அனுமதிப்பது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று, என்று அவர் கூறியுள்ளார்.
"எனவே கிழக்கு அண்டார்டிக்கா பகுதியில் புதிய கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை உருவாக்கி பென்குயின்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்