You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனைவிக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் சௌதி ஆண்: டிவிட்டரில் சீற்றமும் வரவேற்பும்
ஆடவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்கின்ற புகைப்படம் ஒன்று, சமூக வலைதளமான டுவிட்டரில் கலவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சௌதி அரேபியாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி அளித்து சல்மான் மன்னர் ஆணை வெளியிட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் வெளியான இந்தப் புகைப்படம் சரமாரியான விவாதங்களை எழுப்பியுள்ளது.
சௌதி அரேபியாவின் கிழக்கில் தஹ்ரானை சேர்ந்த எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் ஆய்வாளர் பைசல் பாடுகீஷ், தானும் தன்னுடைய மனைவியும் காலியான கார் நிறுத்துமிடத்தில் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து டுவிட் செய்துள்ளார்.
அதில், மன்னரின் ஆணை அமலுக்கு வருவதற்கு தயார் செய்யும் வகையில், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான முறையில், தனியார் கார் நிறுத்துமிடங்களில் ஒன்றில் என்னுடைய மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க தொடங்கினேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுமையிழந்து காத்திருத்தல்
ஆயிரக்கணக்கான முறை இந்தப் புகைப்படம் மீண்டும் மீண்டும் டுவீட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு வந்துள்ள மறுமொழி, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருக்கும் தடையை அகற்றியிருப்பது எவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
திரு. பைசல் பாடுகீஷ் தன்னுடைய மனைவியின் முகத்தை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை சிலர் விமர்சித்துள்ளனர்.
மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டபோது, மனைவியை சங்கடப்படுத்துவதாகவோ அல்லது பாதுகாக்க வேண்டும் என்றோ நீங்கள் நினைக்கவில்லையா? வெட்ககேடு" என்று "பிடெர்1991" என்ற பயனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்,
தங்கள் குடும்பத்திலுள்ள ஆண்களும் இதேபோல வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக பல பெண்கள் நேர்மறையாக பதிவிட்டுள்ளனர்.
"நாளை, என்னுடைய மகன் அஸ்சாம் எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுப்பார்" என்று அமால் நத்ரீன் என்பவர் குறிப்பு எழுதியுள்ளார்.
பைசல் அலேஷ்ரி போன்ற சில ஆண்கள், தங்களுடைய மனைவியருக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்க பாடுகீஷ் ஊக்கமூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். "உங்களுடைய வழியை நாங்கள் தொடர இருக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த அரசரின் ஆணை தன்னுடைய குடும்பத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளதாக இன்னொரு பெண் வெளியிட்டுள்ளார். ஜூல்நர் என்ற பதிவர் ஒருவர், "எனது கணவர் மறுத்தாலும், என்னுடைய மகன் எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்க அனுமதிப்பேன்," என்று எழுதியுள்ளார்.
மனைவியும் தானும் சௌதி அரேபியாவின் சட்டம் மாற வேண்டுமென "பொறுமையிழந்து காத்திருந்ததாக" பிபிசி அரேபிய சேவையிடம் பேசிய பாடுகீஷ் கூறியுள்ளார்.
இந்தப் புகைப்படமானது, பிற சௌதி அரேபிய ஆண்கள் அவர்களின் பெண் உறவினர்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுப்பதற்கு ஊக்கமூட்டும் என்று நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சௌதி அரேபியாவிலுள்ள பிரதான சாலைகளில், பெண்கள் வாகனம் ஓட்டி பழகுவதற்கு தற்போது அனுமதி இல்லை என்பதால், சட்டப்பூர்வ வழியில் பெண்கள் பயிற்சி பெறுவதை ஊக்குவிக்க விரும்பியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அவருடைய மனைவியிடம் பேட்டி காண விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்த அவர், மனைவி பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிட தான் விரும்பவில்லை என்றும் கூறினார்.
அவருக்கு அனுப்பப்பட்ட சில செய்திகள் மிகவும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளதாகவும். அது பற்றி சௌதி அரேபியாவின் இணைய குற்றப்பிரிவிடம் முறையிட்டுள்ளதாகவும் பாடுகீஷ் தெரிவித்திருக்கிறார்.
உலகில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி மறுத்துள்ள ஒரே நாடு சௌதி அரேபியாதான். மன்னரின் புதிய ஆணைப்படி பெண்கள் ஜூன் 2018 முதல் வாகனம் ஓட்டலாம்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்