You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்'
கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், சுதந்திரத்தை அறிவிப்பது தொடர்பான விஷயத்தில் இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் எமது அரசு செயலில் இறங்கும் என்றார்.
ஸ்பேனிஷ் அரசாங்கம் தலையிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டில் கேட்டலோனியா அரசாங்கத்தை கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற நம் கேள்விக்கு பதிலளித்த பூஜ்டிமோன், "அது எல்லாவற்றையும் மாற்றும் பெரும் பிழையாக இருக்கும்" என்றார்.
மேலும் அவர், தற்சமயம் கேட்டலோனியா நிர்வாகத்திற்கும், மேட்ரிடில் இயங்கும் மைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
சட்டத்திற்கு புறம்பான செயல்
அதே சமயத்தில், இந்த வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயினின் அரசர் ஆறாம் ஃபெலிப்பே , இந்த வாக்கெடுப்பை ஒருங்கிணைத்தன் மூலம் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றார்.
தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அரசர், வாக்கெடுப்பின் ஒருருங்கிணைப்பாளர்கள் அரசின் அதிகாரத்திற்கு அவமரியாதை செய்திருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சிக்கான ஜனநாயக கோட்பாடுகளை மீறி இருக்கிறார்கள் என்றார்.
மேலும் அவர், இந்த வாக்கெடுப்பானது வளமான வடகிழக்கின் பொருளாதாரம் உட்பட மொத்த ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கே சேதங்களை ஏற்படுத்தலாம் என்றார். அதே நேரம், இந்த கடினமான காலத்திலிருந்து ஸ்பெயின் மீண்டு வரும் என்பதை அழுத்தமாக தெரிவித்தார்.
ஸ்பெயினின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்ற அவர், ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தார்.
ஸ்பெயினின் மத்திய அரசு இந்த வாக்கெடுப்பையே சட்டவிரோதமானது என்று விவரித்து இருக்கிறது.
மக்கள் ஆர்ப்பாட்டம்
வாக்கெடுப்பு நாளன்று ஸ்பேனிஷ் போலீஸ் தாக்கியதில் 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கேட்டலோனியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பார்சிலோனாவில் மொத்தவிலை கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியிலிருந்த 770 உணவகங்கள் மூடப்பட்டதால், அந்த பகுதியே ஆள் அரவமற்று காணப்பட்டது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன அல்லது குறைந்த அளவில் இயங்கின.
ஆனால், எல் பிராட் விமான நிலையம் வழக்கம் போல இயங்கியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்