பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு இந்த பெண்களின் கைகளில்

மோதி தலைமையிலான மத்திய அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர், கோவா முதல்வரான பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதுகாப்புத் துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

இந்திராவுக்குப் பிறகு நிர்மலா

இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் ஏற்கனவே வகித்து வந்த வர்த்தக துறை அமைச்சர் பதவியையும் கவனித்துக்கொள்வார்.

பாதுகாப்புத் துறைகளில் வழக்கமாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், பல நாடுகள் தங்களது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பெண்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து போன்ற பெரிய நாடுகளில் பாதுகாப்பு கீழ்க்கண்ட பெண் அமைச்சர்களில் கைகளில் உள்ளது.

உர்சுலா வான் டெர் லீன், ஜெர்மனி

ஜெர்மனியில் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரான உர்சுலா, கடந்த 2013 முதல் இத்துறையைக் கவனித்து வருகிறார்.

ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு மருத்துவர். 1999 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மரைஸ் பெய்ன், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் 53-ஆவது பாதுகாப்புத் துறை அமைச்சரான மரைஸ் பெய்ன், பாதுகாப்புத் துறையை கவனித்துக்கொள்ளும் முதல் பெண் அமைச்சராவார்.

சட்டம் படித்துள்ள மரைஸ் பெய்ன், 2015-ம் ஆண்டு இப்பதவியை ஏற்றார்.

மரியா டோலோரஸ் டி கோஸ்பெடால், ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான மரியா நவம்பர் 2016-ம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

ராபர்டா பினோட்டி, இத்தாலி

இத்தாலியின் பாதுகாப்பு துறை அமைச்சரான ராபர்டா, நவீன இலக்கியம் படித்தவர். இத்தாலியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

ஜீனைன் ஹென்னிஸ், நெதர்லாந்து

கடந்த 2012-ம் ஆண்டு முதல் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜீனைன் வகித்து வருகிறார்.

புளோரன்ஸ் பார்லி, பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கியபோது, அதில் பாதியிடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார்.

அப்போது சில்வே கவுல்டார்ட் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், சில பிரச்சனை காரணமாக சில்வே பதவி விலகியதையடுத்து புளோரன்ஸ் பார்லி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :