ரஷ்யா: புராதன பாலத்தை புனரமைக்க சொத்துக்களை விற்ற இருவர்
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைத்திருக்கும் ஒரு சேதமடைந்த தொங்கும் பாலத்தைச் சீரமைக்க, தங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு, கார் மற்றும் தங்கள் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை இருவர் விற்றுள்ளனர்.

பட மூலாதாரம், YouTube/Altai Mountains News
யூரி வாசில்யேவ் மற்றும் ஏவ்கேய்னி லெவின் ஆகிய இருவரும், ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் இருக்கும் அந்தப் பராமரிக்கப்படாத, பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்தப் பாலத்தைச் சீர் செய்ய, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 மில்லியன் ரூபிள் (சுமார் 1,70,000 டாலர்) செலவு செய்திருப்பதாக கொமோசொமோல்ஸ்கயா பிராவ்தா என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பாலத்தின் புணரமைப்புப் பணிகளின் பெரும் பகுதியைத் தாங்களாகவே செய்து கொண்ட அவர்கள், அவ்வப்போது உள்ளூர்வாசிகளிடமும் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர்களின் பணியை ஒரு கட்டுமான நிறுவனத்தைக்கொண்டும் மேற்பார்வை செய்துள்ளனர்.
கட்டூன் நதியின் குறுக்கே அமைந்துள்ள அந்தப் பாலத்தின் முந்தைய உரிமையாளர் சொத்துக்களை இழந்து திவாலாகிப் போனபின்பு, அதைக் கவனிக்க யாரும் இல்லாமல் போனது.
"அதைப் பார்க்கவே மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பாலத்துக்கென்று ஒரு வரலாறு உள்ளது. அது பராமரிப்பின்றி இருப்பது ஒரு வெட்கக்கேடு. அப்பாலம், அல்டாயின் கட்டடக்கலையின் ஒரு முக்கியமான அடையாளம். அதனால், அதைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம்," என்று டி-ஜர்னல் செய்தி இணையத்தளத்திடம் யூரி வாசில்யேவ் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Natalia Vezhlivtseva
எனினும், அவர்களால் அந்தப் பாலத்தை முழுமையாக புணரமைக்க முடியவில்லை. கடந்த காலங்களில் வாகனப் போக்குவரத்து மேற்கொள்ளும் அளவுக்கு வலிமையாக இருந்த அந்தப் பாலம், தற்போது பாதசாரிகள் செல்லும் அளவுக்குத்தான் வலிமை பெற்றுள்ளது.
ரஷ்யாவின் சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களும் இவர்களின் பணி குறித்து கலவையான கருத்துக்களையே கொண்டுள்ளனர். ரஷ்யாவின் முன்னணி சமூக வலைத்தளமான கொன்தக்தேவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 45.9% பேர் மட்டுமே அவர்கள் சிறப்பான பணி செய்வதாகக் கூறியுள்ளனர். மற்றவர்கள் அவர்கள் செய்வது வீண் வேலை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலர் அவர்களின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். ஒரு பத்திரிக்கை விமர்சகர், "ஆம். அது ஒரு சகாப்தம், வரலாறு, அது ஒரு பாலம் மட்டுமல்ல, தங்கப் பானை," என்று எள்ளலாக, அதன்மூலம் அவர்களுக்கு ஏதேனும் பணம் ஈட்டும் நோக்கம் இருக்கலாம் என்று மறைமுகமாக எழுதியுள்ளார். சிலரோ அவர்களைப் பாராட்டியும் எழுதியுள்ளனர். "அவர்களைப் போன்ற தங்கக் கட்டிகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்று ஒரு கொன்தக்தே பயன்பாட்டாளர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த இருவரோ பணத்தாசையால் தாங்கள் இதைச் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். "பணம் முக்கியமல்ல. பயனுள்ள ஒரு செயலைச் செய்வதுடன், நம் மண்ணின் வரலாற்றை மக்களுக்குச் சொல்லவே நான் விரும்புகிறேன்," என்று வாசில்யேவ் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













