காவல்துறை கட்டாயப்படுத்தி ஹிஜாபை கழற்றியதால் முஸ்ஸிம் பெண்ணுக்கு நஷ்டஈடு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல் துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு ஹிஜாப் அகற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்ணுக்கு 85,000 டாலர் (சுமார் 55 லட்சம் இந்திய ரூபாய்) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல் அதிகாரிகள், கட்டாயப்படுத்தித் தனது ஹிஜாபைக் கழற்ற வைத்ததாக கிர்ஸ்டி பவல் எனும் பெண், லாங் பீச் நகர அவைக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.

தன்னை விசாரிக்க ஒரு பெண் காவல் அதிகாரியை அனுப்புமாறு அவர் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர் காவலில் வைக்கப்பட்டிருந்த, அந்த இரவு முழுவதும் ஹிஜாப் இல்லாமலே அவர் கழிக்க வேண்டியிருந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, மத நம்பிக்கைகளால் தலையில் அணியப்படும் ஆடைகள் குறித்த, தன் கொள்கைகளை அந்த மாகாணக் காவல் துறை மாற்றிக்கொண்டது.

"தற்போது, ஆண் அதிகாரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட பிற நபர்கள் இல்லாத சமயத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தேவைப்பட்டால் மட்டுமே, பெண் அதிகாரிகளைக் கொண்டு, காவலில் உள்ள பெண்களின் தலையை மறைக்கும் துணிகளை அகற்ற முடியும்," என்று லாங் பீச்சின், துணை நகர வழக்கறிஞர் மான்டே மச்சிட், தி லாஸ் ஏஞ்சலஸ் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.

லாங் பீச் நகர அவை இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ள விரும்பியதாக, அமெரிக்க இஸ்லாமியர்களின் உறவுகளுக்கான அவை (Council on American-Islamic Relations) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பவலின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த அமைப்பு, பிற ஆண் அதிகாரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட பல நபர்களின் முன்னிலையில், வலுக்கட்டாயமாக அந்த ஆண் அதிகாரி பவலின் ஹிஜாபைக் கழட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அந்தச் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாக பவல் பின்னர் தெரிவித்ததாக, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்தி இணையதளமான ஏபிசி7, பவலுக்கு எதிராக மூன்று கைது உத்தரவுகள் இருந்ததாகவும், அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :