ஆஸ்திரேலியாவில் விமானத்தை தாக்கவிருந்த சதி திட்டம் முறியடிப்பு
பயங்கரவாத நடவடிக்கை மூலம், விமானம் தாக்கப்படலாம் என்ற சந்தேகத்திற்குரிய தாக்குதலை, பயங்கரவாத தடுப்பு போலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் மார்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
இதுகுறித்து சிட்னி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
சோதனைகளில் சில பொருட்களை கைப்பற்றியதாகவும், அவை மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனைத்தை உருவாக்க பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சோதனைகள், "முக்கிய கூட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை" என டர்ன் புல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிட்னியின் புறநகர் பகுதிகளான சர்ரி மலைப்பகுதி, லகெம்பா, வில்லி பார்க் மற்றும் பன்ச் பவுல் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக ஆஸ்திரேலியா தொலைக்காட்சி ஏபிசி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை, "அங்கு எந்த நேரத்திலும் பயங்கரவாதம் நிகழலாம்" என்றே உள்ளது.

பட மூலாதாரம், Reuters
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் "இஸ்லாமிய உத்வேக" கொள்கையுடன் தொடர்புடையவர்கள் என ஆஸ்திரேலிய மத்திய போலிஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கோல்வின் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் உள்ள சிலர் மேம்பட்ட வெடிகுண்டு சாதனங்களுடன் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக வந்த தகவல்களை கருத்தில் கொண்டு, சமீப நாட்களாக சட்டங்கள் அமலாக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"தாக்குதல் நடைபெறவிருந்த இடம், தேதி அல்லது நேரம் குறித்து போலிஸாருக்கு தகவல் இன்னும் கிடைக்கவில்லை" என தெரிவித்த அவர்,
இது குறித்த விசாரணை வழக்கத்தைவிட "நீண்ட காலம் நடைபெறலாம்" என நம்புவதாக தெரிவித்தார்.
சர்ரி மலைபகுதியில் தனது மகனும், கணவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள ஒரு பெண், அவர்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












