ஆக்சிஜன் இல்லாமல் நீருக்கடியில் இரண்டு நாட்கள் தவித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்

கிரேசியா

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, மலொர்கா நீர்பரப்பில் தனது வழக்கமான நீர் மூழ்கும் பயணத்தை மேற்கொண்டார் கிரேசியா
    • எழுதியவர், கிளைர் பேட்ஸ்
    • பதவி, பிபிசி

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மோசமான அனுபவத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கும் டைவர் சிஸ்கோ கிரேசியா ஒரு சுவாசக் காற்று பையுடன் வெளியுலகை பார்க்க முடியுமா என்று தவிப்புடன் காத்திருந்தார். நொடிகள், நிமிடங்களாகி, மணியாகி, நாட்களாக விரிந்தது, ஆனால், காப்பாற்ற யாரும் வரவில்லை… அந்த வாழ்வா சாவா போராட்டத்தின் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

ஏப்ரல் 15-ஆம் நாளன்று மலொர்கா நீர்பரப்பில் தனது வழக்கமான நீர் மூழ்கும் பயணத்தை மேற்கொண்டார் கிரேசியா. புவியியல் ஆசிரியரான அவர், வார இறுதிகளில் கடலுக்குள் சென்று அங்கு இருக்கும் குகைகளை ஆய்வு செய்வது அவரது விருப்பம்.

"மலோர்காவின் வெளிப்புற தோற்றத்தைவிட, கடலுக்கடியில் உள்ள இயற்கை அழகு மனதை கொள்ளைக்கொள்ளும்" என்கிறார் கிரேசியா.

கிரேசியா

பட மூலாதாரம், PERE GAMUNDI

படக்குறிப்பு, கிரேசியா அங்கிருந்த பாறை படிமத்தின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டிருந்தார்

கிரேசியாவும் அவரது நண்பர் குய்லெம் மஸ்காரோவும், லெபிரின்த்தில் இருந்து ஒரு மணி நேரம் நீருக்கடியில் நீரோட்டத்தில் நீந்தி 'சா பிக்குவெட்டா' குகையை அடைந்தனர்.

கிரேசியா அங்கிருந்த பாறை படிமத்தின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டிருந்தார், மஸ்காரோ, அடுத்தப் பகுதியை பார்க்க சென்றுவிட்டார்.

கேவ் டைவர்ஸ்

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, நீருக்கடியில் குகைக்கு செல்பவர்கள் நிலத்தில் இருந்து தொடர் வழிகாட்டை பெறும் அமைப்பை வைத்திருப்பார்கள்

நிலத்தில் இருந்து தங்களை பிணைக்கும் குறுகிய நைலான் வழிகாட்டி கயிறு இல்லாததை உணர்ந்தார்கள், அது அறுந்திருக்கலாம் அல்லது நழுவியிருக்கலாம்.

"அந்த வழிகாட்டி குகைக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் உதவியாக இருக்கும்" என்கிறார் 54 வயது கிரேசியா.

"சில பாறைகள் அதில் விழுந்திருக்கலாம் என்று நாங்கள் ஊகிப்போம். அதை தேடுவதில் நிறைய நேரம் செலவழித்தாலும் கண்டுபிடிப்பது கடினம்".

ஆபத்தின் நுழைவாயிலில் இருந்த இருவரும், தங்கள் சுவாசப்பையில் இருந்த உயிர்காற்றை சுவாசித்தார்கள். அவசரத்திற்கு அது போதுமானதாக இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

மலோர்க்கா

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, மலோர்க்கா நீர்பரப்பின் அடியில் உள்ள குகையில் இருக்கும் வண்டலை எடுப்பது சுலபம்

அருகில் இருந்த மற்றொரு குகையில் ஒரு சுவாசப்பை இருப்பதைப் பற்றி பிற டைவர்கள் சொன்னது அதிர்ஷ்டவசமாக நினைவுக்கு வந்த்து. மஸ்காராவிடம் அதைப் பற்றிச் சொன்னார்.

ஒருவர் வெளியேறுவதற்கான காற்று மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று நண்பர்கள் இருவருமே உணர்ந்திருந்தனர்.

"மஸ்காரா என்னை விட மெலிந்தவர், அவருக்கு சுவாசிக்க குறைவான காற்று போதும். அதைத்தவிர, காற்றில் கரியமில வாயு அதிகம் கலந்திருக்கும்,ம் குகையில் சுவாசிப்பதற்கான அனுபவம் எனக்கு அதிகம் என்பதால் நான் அங்கேயே இருந்து உதவிக்காக காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்" என்கிறார் கிரேசியா.

நீண்ட வழித்தடத்தைக் கொண்ட மாற்றுத் திட்டத்தையும் யோசித்தார்கள். ஆனால், அந்த வழியில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதோடு, வழிகாட்டியில்லாமல் பயணித்தால் வழிமாறி போகும் ஆபத்தும் இருக்கிறது.

"அது பனிமூட்டம் நிறைந்த இரவு நேரத்தில் கார் ஓட்டுவதைப் போன்று இருக்கும்" கிரேசியா கூறுகிறார்.

"என்னை தனியாக விட்டுச் செல்ல நண்பருக்கு மனமில்லாத போதிலும், அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை."என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குகை

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்தபோது குகையில் வெள்ளம் ஏற்பட்டது

மஸ்காரோ அங்கிருந்து கிளம்பியதும், தன்னிடம் இருந்த சாதனங்களைக் கொண்டு அந்தப் பகுதியில் ஆய்வுகளைத் தொடங்கிவிட்டார். அது 80 மீட்டர் (260அடி) நீளமும், 20 மீட்டர் அகலமும் இருந்த்து. குகையின் உயரம் 12 மீட்டர்.

அங்கிருக்கும் ஏரியில் உள்ள நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்ததையும் கண்டுக்கொண்டார். அங்கிருந்த பெரியளவிலான தட்டை வடிவ பாறையில் ஓய்வெடுத்தார்.

கிரேசியாவிடம் இருந்த மூன்று டார்ச் லைட்டுகளில் இரண்டு வேலை செய்வதை நிறுத்திவிட, மூன்றாவதில் பேட்டரி குறைந்துவிட்டதால், வெளிச்சம் இல்லாமல் சமாளிக்கவேண்டியிருந்தது.

"சிறுநீர் கழிக்க அல்லது தண்ணீர் எடுக்கச் செல்லும்போது மட்டுமே டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தினேன். "

செய்வதற்கு பெரிய வேலை எதுவும் இல்லையென்றாலும், கடும் இருளில், காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், நொடிப் பொழுதும் ஆண்டுக்கணக்காய் கனத்தது.

"பல ஆண்டுகளாக டைவிங் செய்துவந்தாலும் எனக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெற்றது ஏன் என்று கேள்விகள் எழுந்தாலும், நண்பர் விரைவில் வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்"

"நேரம் செல்லச்செல்ல, நம்பிக்கையும் தேய்ந்தது. மஸ்காரோ வழி தவறிவிட்டார் அல்லது இறந்துவிட்டார், நான் இங்கு சிக்கிக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன். "

மலோர்க்கா குகை

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, கடலுக்கு அடியில் உள்ள மலோர்க்கா குகைகளில் தடம் மாறுவது இயல்பானது

தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் நினைத்துக் கொண்டாராம். "சிறுவயதிலேயே அப்பாவை இழந்ததால் 15 வயது மகன், 9 வயது மகளின் எதிர்காலம் என்னவாகும் என்று வருத்தப்பட்டேன்" என்கிறார் அவர்.

அமைதியாக இருக்க முயற்சித்தாலும், அதிக கரியமிலத்தன்மை கொண்ட காற்றை சுவாசிப்பதன் தாக்கத்தையும் உணர்ந்தார். நிலத்தில் சுவாசிக்கும் காற்றில் 0.04% ஆக இருக்கும் கரியமில வாயு, நீருக்கடியில் இருக்கும் குகைக்குள் 5%ஆக இருக்கும்.

"தலைவலிக்கத் தொடங்கியதுடன், ஆக்சிஜன் குறையத்தொடங்கியது, தூக்கமும் வரவில்லை, மூளை சோர்வடையத் தொடங்கியது.

மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றின. யாரோ டைவர் வருவதுபோலும், வெளிச்சம் தோன்றுவது இருந்தது, ஆனால், அது மனபிரம்மை என்று தெரிந்ததும், எதிர்பார்ப்பு நிராசையானது.

கிரேசியா

பட மூலாதாரம், TONI CIRER

படக்குறிப்பு, கிரேசியா பழைய படம். சில மணி நேரத்தில் மூச்சுத்திணறல் தொடங்கியது

"உணவும், காற்றும் இல்லாமல் டைவர்கள் இறப்பதுபோல நானும் மரணித்துவிடுவேன் என்றே எனக்குத் தோன்றியது" என்கிறார் கிரேசியா..

"ஒரே டார்ச்சில் எஞ்சியிருந்த பேட்டரியும் முடிந்துவிடும் என்ற அச்சம் எழுந்த்து. நான் இறப்பது முடிவாகிவிட்டது என்று நினைக்கத் தொடங்கினேன், மரணம் விரைவில் நிகழுமா அல்லது நேரமாகுமா என்று மரணத்தின் இறுதிக்கணங்களை கணிக்கத் தொடங்கிவிட்டேன். "

"மீண்டும் யாரோ வருவதுபோல் தோன்றியது, முதலில் மனபிரம்மையாக இருக்குமோ என்றே நினைத்தேன், ஆனால் இந்த முறை எதிர்பார்ப்பு நிறைவேறியது வந்தது எனது பழைய நண்பர் பெர்னட் க்ளாமர்"

"தண்ணீரில் குதித்து, அவரை கட்டித் தழுவிக்கொண்டேன். எப்படி இருக்கிறாய் என்று கேட்டார், நான் இறந்துவிடுவேன் என்று பயந்தேன்" என்று பதிலளித்தேன்.

கிரேசியா

பட மூலாதாரம், PERE GAMUNDI

படக்குறிப்பு, கிரேசியா (வலது), நண்பரும், தன்னை மீட்டவருமான பெர்னெட் க்ளாமருடன்

நண்பர் மஸ்கரோ எச்சரிக்கை ஒலி எழுப்பியதையும், ஆனால் குறைவான புலப்படும் தன்மையால் மீட்புப்பணி தாமதமானதையும் கிரேசியா தெரிந்துக் கொண்டார்.

முதலில் கேட்ட ஓசைகள், மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பாறைகளை உடைக்க டிரில் இயந்திரம் மூலம் துளை போட்டது தெரியவந்தது. ஆனால் அந்த வழிமுறைகள் தோல்வியடைந்தன. இறுதியில் க்ளாமரும், ஜான் ஃப்ரெடியும் கிரேசியாவை கண்டறியும் முயற்சியில் வெற்றியடைந்தனர்.

அப்போதும் கிரேசியாவுக்கு வெளியேறும் நேரம் வரவில்லை. க்ளமர் மீட்புக் குழுவினரை சந்திக்க சென்றார். ஆனால், செல்வதற்கு முன்பு சில குளுக்கோஸ் பாக்கெட்களை கொடுத்துச் சென்றார்.

"அதன்பிறகு எட்டு மணி நேரம் குகைக்குள் இருந்தேன், ஆனால் நம்பிக்கையுடன்" என்கிறார் கிரேசியா.

பிறகு ஆக்சிஜன் நிரம்பிய காற்றைக் கொடுத்து சுவாசிக்கச் செய்து, கிரேசியா நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அதாவது கிளம்பிய அறுபது மணி நேரத்திற்கு பின் நிலத்தை வந்தடைந்தார் கிரேசியா. நண்பர் குயிலெம் மஸ்கரோ கிரேசியாவை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்.

"அவரை பார்த்த்தும் தழுவிக்கொண்டேன். ஆனால் பேசுவதற்கு நேரமில்லை. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."

"நீரில் இருந்து வெளியே வந்த்தும் எனது உடலின் வெப்பம் 32C ஆக குறைந்துவிட்டது. இரவு முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது."

கிரேசியா

பட மூலாதாரம், TWITTER/@112ILLESBALEARS

படக்குறிப்பு, கிரேசியா அழைத்துச் செல்லப்படுகிறார்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த கிரேசியா பிறகு அவற்றை முழுமையாக அசைபோட்டார்.

"டைவிங் செய்பவர்கள் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவேண்டும். ஆனால், அடுத்த நாள், நான் மீட்கப்படுவதை தொலைகாட்சியில் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதேன். நான் அதிருஷ்டசாலி. அனைவருக்கும் நன்றி கடன்பட்டவன்."

மயிரிழையில் உயிர்பிழைத்த கிரேசியா ஒரு மாத்ததிற்கு பிறகு சா பிக்வெட்டாவிற்கு சென்றார். அப்போது, தான் நீண்டநேரம் உதவிக்காக காத்திருந்த குகைக்கு சென்றார்.

"அந்த குகையை பார்த்த்தும் எனக்கு எதிர்மறையான எண்ணம் தோன்றவில்லை" என்கிறார் கிரேசியா.

மீண்டும் மலோர்காவின் நீருக்கடியில் தனது வழக்கமான ஆய்வுப்பணியை தொடங்கிவிட்டார்.

"என் குழந்தைகளுக்கு நான் இந்த ஆய்வில் பிடிக்கவில்லை என்றாலும், என்னை இந்த ஆய்வில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னதில்லை" என்று சொல்லும் கிரேசியா, "நீருக்கடியில் எனது ஆய்வு 24 ஆண்டுகளாக தொடர்கிறது. என்னுடன் ரத்தமாக, மூச்சுக்காற்றாக இரண்டற கலந்துவிட்டது" என்று முத்தாய்ப்பாக சொல்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :