ரஷ்யா: '30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார்'

பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டனின் தடைகளுக்கு பதிலடியாக, 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார் என்று கூறும் ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்க அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை லெஸ்வெஸ்டா (Izvestia) நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை வேறு ரஷ்ய அதிகாரிகளும் வெளியிட்டிருந்தனர்.
டிசம்பர் மாதத்தில் 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் இரண்டு புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே அமெரிக்காவின் தடைகளை ரஷ்யா எதிர்கொண்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்தை பாதிக்கும் வகையில், ரஷ்ய அரசின் முகவர்கள் கணினிகளில் ஊடுருவல் செய்ததாக அமெரிக்க புலனாய்வு முகமையின் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஹாம்பர்கில் இந்த மாதம் ஏழாம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த விவகாரம் குறித்து பேசியதாக லெஸ்வெஸ்டா நாளிதழ் கூறுகிறது.
ரஷ்யா-அமெரிக்கா இடையிலான பதற்றங்கள்
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது பற்றிய விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை க்ரெம்ளின் தொடர்ந்து மறுக்கிறது.
ஜோசப் ஹெல்லரின் புகழ்பெற்ற நையாண்டி நாவலை டொனால்ட் டிரம்ப் படித்திருந்தால், அதில் சித்தரிக்கப்பட்ட கேட்ச் -22 எனப்படும் இக்கட்டான சூழ்நிலையை அவர் புரிந்துக்கொள்வார்.

பட மூலாதாரம், EPA
கடந்த ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமாவால் விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தற்போது நீக்கினால் க்ரெம்ளினுடனான, டிரம்பின் உறவுகள் எதிர்கட்சிகளின் பார்வையில் உறுதிபடுத்தப்படும். இந்த நிலைமையில், ரஷ்யாவுக்கு வழங்கும் எந்தவொரு சலுகையும், ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால், ரஷ்யாவிற்கு சாதகமாக செயல்படாவிட்டால், அமெரிக்க தூதரக அதிகாரிகளை மாஸ்கோ வெளியேற்றுவதோடு, அமெரிக்காவின் தூதரக கட்டிடத்தையும் கைப்பற்றலாம். இது, ரஷ்யாவுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்த விரும்பும் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
பதில் நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவருவது இது முதல்முறை அல்ல. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் வாஷிங்டனுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, தற்போது வெளியுறவு அமைச்சகம் வாயிலாக, க்ரெம்ளினுக்கு ஆதரவான நாளிதழ் மூலம் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.
வாஷிங்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்றிய முந்தைய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் ஜி.ஆர்.யூ மற்றும் எஃப்.எஸ்.பி புலனாய்வு முகமைகள் உட்பட ஒன்பது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதும் தடைவிதித்தது. மேலும் நியூயார்க் மற்றும் மேரிலாண்டில் ரஷ்ய புலனாய்வு அமைப்புகளும் மூடப்பட்டன.
பதிலுக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளை தவிர்த்திருக்கும் புதின், முன்புபோல் வார்த்தைமோதல்களிலும் ஈடுபடுவதில்லை.
ஹாம்பர்கில் இந்த விவகாரம் பற்றி பேசியபோது, "இந்த சிக்கலை தீர்க்க எந்தவித திட்டமும் டிரம்பிடம் இல்லை" என்று ரஷ்யா கூறுகிறது.
IMAGE - 1 மேரிலாண்டில் ரஷ்யாவின் தூதரக இடத்தை அமெரிக்க அரசு டிசம்பரில் கைப்பற்றியது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா, மாஸ்கோவில் வடமேற்கில் அமைந்திருக்கும் அமெரிக்க அரசின் பங்களா மற்றும் மாஸ்கோவில் உள்ள அமெரிக்காவின் கிடங்கையும் கைப்பற்றமுடியும் என்று பெயர் வெளியிட விரும்பாத ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர், லெஸ்வெஸ்டா நாளிதழிடம் தெரிவித்தார்.
இருப்பினும், அமெரிக்க தூதரின் ஸ்பாசோ ஹவுஸ் வீடு, மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஆங்கிலோ-அமெரிக்கன் பள்ளி பாதிக்கப்படாது.
இந்த மாத இறுதியில் ரஷ்ய வெளியுறவு துணையமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் மற்றும் அமெரிக்க உள்துறைச் செயலர் தாமஸ் ஷானோன் இடையே செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்றால், ரஷ்யா தற்போது வெளியிட்டிருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று லெஸ்வெஸ்டா நாளிதழ் கூறுகிறது.
உக்ரைன் பிரச்சனையில் மாஸ்கோவின் பங்கு தொடர்பாக, அமெரிக்காவும், மேற்கத்திய கூட்டணி நாடுகளும் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன. பதிலுக்கு, மேற்கத்திய உணவுகள் மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கிறது.
இதையும் படிக்கலாம்:
இது என்ன உச்சி மாநாடா, உச்சகட்ட காமெடியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













