You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோனட் உண்பதில்லை என்று முஸ்லிம்கள் புரளி பரப்புவது ஏன்?
டோனட் எனப்படும் இனிப்பு அல்லது சாக்லேட் கிரீம் தடவிய `பன்` போன்ற ஒரு ரொட்டியை முஸ்லிம்கள் உண்பதில்லை என்ற புரளியை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலரே சமூக வலைத் தளங்களில் பரப்புகின்றனர்.
முஸ்லிம்கள் மீதான வெறுப்பில் செய்யப்படும் கேலிகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், ``டோனட் என்பது ஹலால் உணவு அல்ல, எனவே யாரும் அதை மசூதிகளுக்கு அனுப்பிவைத்துவிடவேண்டாம்`` என்று கேலியாகத் தெரிவிக்கின்றனர்.
பன்றிக் கறியைத் தொடவோ, உண்ணவோ முஸ்லிம்களை அவர்களது மதம் தடை செய்துள்ளதால் அவற்றை மசூதிகளுக்கு அருகே போட்டு முஸ்லிம்களை சினமூட்டும் செயல்கள் சில இடங்களில் நடந்தன. அதற்கு பதிலடியாக, சில முஸ்லிம் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் இந்தப் புரளியை சமூக வலைத் தளத்தில் தொடங்கிவிட்டனர்.
``முஸ்லிம்கள் டோனட் உண்பதில்லை என்று புரளி கிளப்பிவிடுங்கள், அடுத்த நாளே டோனட்டுகள் மசூதிகளின் கதவில் தொங்கும்`` என்று 2014-லேயே பதிவிட்டார் ஒரு பதிவர்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புரளி மெதுவாக, ஆனால் உறுதியாகப் பரவத் தொடங்கியது.
2012-ல் மலேசியாவில் பன்றிக் கறியின் மீதங்கள் பல மசூதிகளுக்கு வெளியே வீசப்பட்டன. 2015-ல் பிரிட்டனில் சோலிஹல்லில் உள்ள ஒரு கட்டடத்தை முஸ்லிம்கள் சட்டவிரோதமாக மசூதியாகப் பயன்படுத்துவதாகப் புரளி பரவிய நிலையில் அந்தக் கட்டடத்துக்கு வெளியே பன்றியின் தலைகள் போடப்பட்டன. 2016-ல் பிரிஸ்டலில் உள்ள மசூதி ஒன்றுக்கு வெளியே பன்றிக்கறியைக் கொண்டு செய்யப்பட்ட பேகான் சாண்ட்விட்ச்களை வீசியதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்டதா?
இது மாதிரியான வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த நிலையில், டோனட் என்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்பது மாதிரியான கேலி ட்விட்டர் பதிவுகள் வந்தன.
ஆனால் அதை வாசித்த பலர் அவற்றை சீரியசான பதிவுகளாக எடுத்துக்கொண்டு குழம்பினர். "அது எப்படி ஹராம்" ஆகும் என்று சிலர் சீரியசாக கேட்கத் தொடங்கினர். அது எப்படி ஹராம் (தடைசெய்யப்பட்டது) என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் முஸ்லிம் அல்லாத பதிவர்களுக்கும் தொற்றிக் கொண்டது.
பத்திரிகையாளர் முர்த்தாசா ஹூசைன் 2016-ல் கேலியாக இட்ட ட்விட்டர் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை வைத்து ரெட்டிட் (Reddit) தளத்தில் நடந்த விவாதம் ஒன்றில் ஒரு முஸ்லிம் பதிவர், "எனக்கு கபாப் பிடிக்காது. எனவே அவற்றை மசூதிகளுக்கு அனுப்பிவிடாதீர்கள். அதிலும் பெரிய கபாப்களை, இனிப்பு தூவி, குச்சிகளில் குத்தி அனுப்பிவிடவே வேண்டாம்" என ஒரு பதிவர் எழுதினார்.
"பளபளப்பான டோனட்டுகள் ரொம்ப மோசம். சுடச்சுட ஒரு டஜன் டோனட்டுகளை அனுப்புவது மன்னிக்கவே முடியாத குற்றம்" என்று ஒருவர் எழுதினார்.
டோனட்டை பள்ளியில் வீசியதாக ஒரு செய்தித் தாளில் செய்தி வெளியானதைப் போல கிராஃபிக் செய்யப்பட்ட கேலிப் படம் ஒன்றும் வெளியானது. மார்டர் ஃபர்ஸ்ட் (Mordor First) என்ற பெயரிலான ஃபேஸ்புக் கணக்கில் டோனட் கேலிகள் 2016 இறுதியில் பகிரப்பட்டன. அந்தக் கணக்கில் வெளியான டோனட் படம் ஒன்றை 11,000 பேருக்கு மேல் பகிர்ந்திருந்தனர்.
ஹூசைன் ட்வீட்டுக்குப் பிறகு ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட கேலிகளுக்கு 6,000 உணர்வுக் குறிகள் (ரியாக்ஷன்கள்) இடப்பட்டன.
திண்பண்ட வகைகள் முதல், ஐ-போன் வரை பலவற்றின் பெயரைக் குறிப்பிட்டு அவற்றைத் தாம் வெறுப்பதாகவும் அவற்றை அனுப்பி தம்மை அவமதிக்கவேண்டும் என்றும் ஒரு பதிவர் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்