கருத்தடைக்கு முயன்றால் பெண்களை பணி நீக்கம் செய்ய சட்டம் இயற்றும் அமெரிக்க மாநிலம்
கெட்டவை மட்டுமே அதிகாரம் செலுத்தும் என்று கருதப்படும் கற்பனை இடமான 'டிஸ்டோபியா'வின் அமெரிக்க வடிவத்தில், ஒரு பழமைவாத உத்தரவு சமூகத்தை ஆள்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பெண்களின் உடல் அங்கு அரசின் சொத்தாக கருதப்படுகிறது. அவர்களின் முக்கிய வேலை குழந்தையைக் கருவில் சுமப்பது என்று சுருக்கப்பட்டுவிட்டது. அவர்களின் தன்னதிகாரம் ஆணாதிக்க கட்டமைப்புள்ள சமூகத்தின் உத்தரவுகளுக்கு கீழானதாக்கப்பட்டுவிட்டது.
நாம் இங்கிலாந்தில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதை விவரிக்கும் தி ஹேண்ட்மெய்ட்'ஸ் டேல் (The Handmaid's Tale) புதினத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இது இப்போதைய உண்மையான அமெரிக்காவில் நிகழ்கிறது.
அமெரிக்க ஊடகங்களின்படி, இந்த வாரம் மிஸோரி மாநிலத்தின் அரசியல்வாதிகள் கருக்கலைப்புக்கு எதிரான புதிய மசோதாவை நிறைவேற்றினால், பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்படவோ, தாங்கள் வசிக்கும் வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றப்படவோ கூடும்.

பட மூலாதாரம், MGM
பணியமர்த்துபவர்களும் வீட்டு உரிமையாளர்களும் கருக்கலைப்பு செய்துகொண்ட, கருத்தடையை பயன்படுத்தும் மற்றும் திருமண உறவுக்கு வெளியில் கருவுற்ற பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதை சட்ட விரோதமாக்கி கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை செனட் மசோதா-5 "திறம்பட செயலற்றதாக்கலாம்" என்று அஸோஸியேட் பிரஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள மசோதாவின்படி பணியமர்த்துபவர்களும், வீட்டு உரிமையாளர்களும் பெண்களிடம் அவர்கள் பயன்படுத்தும் "இனப்பெருக்க சுகாதார முறைகள்" குறித்து கேட்க வழிவகை செய்யும் என்று நியூஸ்வீக் எச்சரிக்கிறது.
இந்த மசோதா மிஸோரி ஆளுநர் எரிக் கிரேய்டன்ஸ் முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை செல்லாததாக்கவும், கருக்கலைப்புக்கான கட்டுப்பாடுகளை இறுக்கமானதாக்கவும் நோக்குடனும் கூட்டிய சிறப்பு செனட் அமர்வின் விளைவாகும்.
கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும் அமைப்பான நரல் ப்ரோ-சாய்ஸ் மிஸோரி (NARAL Pro-Choice Missouri) அமைப்பு இந்த மசோதாவை "பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஓர் அவமானகரமான அடி" என்று விவரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பத்து மணி நேரம் பூட்டிய கதவுகளுக்குப் பின் நடந்த பேச்சுவார்தைகளுக்குப் பின், கடந்த வாரம் செனட் மசோதா-5, மிஸோரி மாகாணத்தின் மேலவையான செனட்டால் நிறைவேற்றப்பட்டது.
கருக்கலைப்பு மருத்துமனைகளுக்கான வருடாந்திர ஆய்வு உட்பட கடுமையான கூடுதல் ஷரத்துகளுடன் அம்மாகாணத்தின் கீழவையும் அச்சட்டத்தை நிறைவேற்றியது. இந்த வாரம் செனட்டில் இறுதி வாக்கெடுப்பிற்குப் பின்னர், இம்மசோதாவை சட்டமாக்குவதற்கான ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் இந்த நடவடிக்கைகளின் இறுதி அமலாக்கம் இன்னும் நிச்சயமாகவில்லை.
சில அமெரிக்க ஊடக நிறுவனங்கள் ஆளுநரின் உத்திகள் மற்றும் கூடுதல் திருத்தங்கள் ஆகியவற்றில் மேலவைக்கும் கீழவைக்கும் இடையே இழுபறி உண்டாகலாம் என்று கணித்துள்ளன.

பட மூலாதாரம், TWITTER
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட ரீதியான சவால்கள் தொடுக்கப்படும் என்று இனப்பெருக்க உரிமைகளுக்கு ஆதரவானவர்கள் கூறியுள்ளனர். ப்ளேன்டு பேரண்ட்ஹூட் (Planned Parenthood) அமைப்பின் கிரேட் ப்ளைன்ஸ் பகுதியின் தலைமை செயல் அலுவலர் லாரா மெக்கேடு, "அரசியலைப்புக்கு எதிரான விதிமுறைகளை மிஸோரி அரசாங்கம் மீண்டும் நிறைவேற்றினால், அதை நீக்குவதற்கு ப்ளேன்டு பேரண்ட்ஹூட் எல்லா வகையிலும் முயற்சி செய்யும்" என்று தி மிஸோரியன் இதழிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு குறியீட்டு நகர்வாக, NARAL அமைப்பின் உறுப்பினர்கள், இனப்பெருக்க உரிமைகள் குறித்த மிஸோரி மாகாண அவையின் அமர்வுகளில் ஹேண்ட்மெய்டு கதாபாத்திரம் போல உடையணிந்து பங்கேற்றனர்.
மிஸோரி மாகாணத்தில் தற்போது இந்த மசோதா நிறைவேறினால், கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராடுபவர்களுக்கு, 'டிஸ்டோபியா' போன்ற எதிர்காலத்தையே தெளிவாக உணர்த்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












