பெண் வேடமிட்டு ஐ.எஸ் தீவிரவாதி தாக்கியதில் 14 பேர் பலி
இராக்கில் ஞாயிறன்று மாலையில், இடம் பெயர்ந்தவர்களின் முகாம் மீது பெண் போல் மாறுவேடமணிந்த ஐ.எஸ் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுக்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், AFP
அன்பர் மாகாணத்தில் இருந்து வெளியேறிய மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக, அல்-வஃபா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் கைலோ 60 முகாமில், தற்கொலைப் படையாளி தாக்குதல் நடத்தினார்.
இந்தத் தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
இராக்கின் ராணுவ நிலையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்பர் மாகாணம் மற்றும் ரமாடி, ஃபலூஜா நகரங்களில் இருந்து ஐ.எஸ் குழுவினரை இராக் படையினர் பெருமளவில் வெளியேற்றிவிட்டாலும், சிரியாவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியை அந்த அமைப்பு இன்னும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு, அன்பர் மாகாணத்தின் கவுன்சிலர் தாஹா அப்துல் கானி அளித்த பேட்டியில், ஒரு பெண்ணைப்போல் தலையையும் உடலையும் மறைத்து உடையணிந்து தாக்குதல்தாரர் வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் மாறுவேடம் தரித்தவரின் பேரில் சந்தேகமடைந்த ஒரு காவல்துறை அதிகாரி அவரை நெருங்கி, குண்டு வெடிப்பதற்கு முன் கட்டிப்பிடித்து, மற்றவர்களை காப்பாற்றும் கேடயமாக செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இராக்கிற்கான ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டே இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், "இது பயங்கரமானது, முகாமில் இருந்தவர்கள் தங்களது பாதுகாப்புக்காக முகாமை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் மிகத் தொலைதூரம் பயணித்து உதவி கோருகின்றனர்" என்று கூறுகிறார்.
அண்மை வாரங்களில் மேற்கு அன்பரில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஜூன் 25 முதல் 28 க்குள் அல்-கைமிற்கு தெற்கே அல்-நதிரா சோதனைச் சாவடிக்கு 900 பேர் வந்துள்ளனர்.

பட மூலாதாரம், AHMAD AL-RUBAYE/AFP/Getty Images
எதிர்வரும் வாரங்களில் இந்தப் பகுதிகளில் சண்டை மேலும் தீவிரமடையும் என்பதை உணர்ந்திருக்கிறோம். இதனால் பொதுமக்கள் அதிகமான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்பதுதான் கவலை தருகிறது என்று, கிராண்டே கூறுகிறார்.
தாக்குதல் நடைபெற்ற கைலோ 60 முகாம் தற்போது மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் கவுன்சிலின் தலைவர் கூறியிருக்கிறார்.
அங்கிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு, அதிக பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்குவதற்காக ரமாடிக்கு மேற்கில் இருக்கும் கைலோ 18 முகாமில் தங்கவைக்கப்படுவதாக, அட்னன் ஃபய்ஹன், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இராக்கில் 3.3 மில்லியன் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்திருக்கின்றனர், அதில் 30 சத மக்கள் அன்பர் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என சர்வதேச குடிபெயர்வோர் அமைப்பு கூறுகிறது.
மார்ச் மாத தகவல்களின்படி, 3.5 லட்சம் பேர் முகாம்கள் அல்லது தங்கள் உறவினர்களின் வீடுகளில் வசிக்கிறார்கள். சுமார் 5 லட்சம் பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
இதைத்தவிர, திங்களன்று மொசூலின் பழைய நகரில் இரண்டு பெண் தற்கொலைதாரிகள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் இராக்கிப் படைகள் மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால், ஐ.எஸ் தீவிரவாதக் குழுவினரின் வலுக்கோட்டையாக இருந்த மொசூலில், தற்போது பழைய நகரம் மட்டுமே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது
மொசூலில் அல்-நூரி மசூதி தகர்க்கப்பட்ட பிபிசியின் பிரத்யேக காணொளி
பிற செய்திகள்
- "திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்"
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- 26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்
- கூட்டுறவுக் கடன் தள்ளுபடியில் குழப்பம்
- கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













