You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”
சௌதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான 'சௌதியா', அதற்குச் சொந்தமான விமானம் ஒன்று இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பது போன்று சமூக வலைத்தளங்களில் உலவி வரும் புகைப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்ட புனைவு என்று மறுத்துள்ளது.
"தங்கள் நாட்டின் ஒரு தேசிய சின்னமாகத் திகழும் அந்த விமான நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படும், அநாமதேய, பெரிய அளவிலான சமூக வலைத்தள கணக்குகள் மூலம் பொய், வதந்தி மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பகிர சில குழுக்கள் இயங்குகின்றன," என்று அரசு செய்தித்தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் அல்-தயேப் கூறியுள்ளதாக, ஒகஸ் எனும் சௌதி அரேபிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக, அப்படங்களின் உண்மை தன்மையை ஆராயாமல் சிலர் அவற்றை பகிர்கின்றனர். அச்செயலுக்கு அவர்களே பொறுப்பாவதுடன், சட்டப்படியான தண்டனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்," என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த "குழுக்கள்" யாரென்று அல்-தயேப் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், தங்கள் சிறிய அண்டை நாடான கத்தார் மீது சௌதி தலைமையிலான நாடுகள் விதித்துள்ள தடைகளை எதிர்த்து சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் செய்பவர்களையே அவர் குறிப்பிடுகிறார் என்று சௌதி வாசகர்கள் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.
சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள், கத்தார், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி செய்வதாகவும், அப்பிராந்தியத்தில் சௌதிக்கு எதிரான சக்தியாக இருக்கும் இரானுடன் உறவு கொள்வதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
இஸ்ரேல் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எல் அல் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இந்த பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் உண்மையான படம் ராய்டர்ஸ் செய்தி முகமையால் எடுக்கப்பட்டது.
இஸ்ரேலுடன் ராஜாங்க ரீதியிலான உறவேதும் இல்லாத சௌதி அரேபியா, அந்த இரு நாடுகளுக்கும் இடையே முறைசாரா உறவுகள் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து தொடர்ந்து மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது.
மே 2015-இல் இயக்கப்படாத நிலையில் இருந்த, ஒரு சௌதி அரேபிய விமானத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு போர்ச்சுகீசிய நிறுவனம், பயணிகள் யாரும் இல்லாத அவ்விமானத்தை, பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறக்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை சவுதி அரேபியா உடனடியாக ரத்து செய்தது.
10 நாட்களில் அல்ஜெசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்தனை
தொடர்புடைய செய்திகள்
சௌதி அரேபியா, கத்தார் மோதல்: டொனால்ட் டிரம்ப் காரணமா?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்