You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தியைத் திருடிய கனடா காகம், தபால் ஊழியரைத் தாக்கி, தபால் சேவையை நிறுத்தியது
கனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வான்கூவரில், இந்தப் பிரச்சனை இல்லை என்று உறுதியான பிறகுதான் அங்குள்ள பல முகவரிகளுக்கு அளிக்கப்படவேண்டிய தபால்கள் வழங்கப்படும் என்று கனடா தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர் ஒருவருக்கு ரத்தம் வரும் அளவுக்கு கேனக் காகம் கடித்ததாக கூறப்படுகிறது.
அக்காகம், கிழக்கு வான்கூவர் நகரத்தில் ஓடும் மெட்ரோ ரயிலில் தொத்திக்கொண்டு வருமாம். மேலும் அது குற்றச் சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து ஒரு கத்தியை எடுத்துச் செல்வது உட்பட, பல பளபளப்பான பொருட்களை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
''துரதிருஷ்டவசமாக, வான்கூவர் சுற்றுப்புறத்தில், தபால்களை வழங்க முயற்சி செய்யும்போது, எங்களின் ஊழியர்கள் ஒரு காகத்தால் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளனர். எங்களுடைய ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால், மூன்று வீடுகளுக்கு அஞ்சல் விநியோகம் செய்வது இடை நிறுத்தப்பட்டுள்ளது,'' என்று பிபிசியிடம் பேசிய கனடா போஸ்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டார்சியா க்மெட் தெரிவித்தார்.
தெருவில் மற்ற வீட்டினருக்கு தபால்களை கொடுக்கும்போது நாங்கள் சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம். மற்ற மூன்று வீடுகளுக்கு தபால் வழங்குவது பாதுகாப்பானது என்று எங்கள் ஊழியர்கள் நம்பினால், அப்போது அவர்கள் விநியோகம் செய்வார்கள், " என்று அவர் தெரிவித்தார்.
''இந்த காகம் அஞ்சல் ஊழியரை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. அதில் அவருக்கு தோல் கிழிந்து, ரத்தம் வழியும் அளவுக்கு தாக்கியுள்ளது,'' என `கேனக் அண்ட் ஐ` (Canuck and I) என்ற பேஸ்புக் குழுவில் அந்த காகத்தின் செயல்களை பதிவு செய்துவரும் ஷான் பெர்க்மென் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் சிறிது காலத்தில், தனது வீட்டிற்கு அஞ்சல்கள் வருவது மற்றும் அருகில் உள்ள இரண்டு வீட்டினருக்கு தாபால்கள் வருவது நின்ற நிலையில், அவர் ஒரு பேஸ்புக் குழுவை தொடங்கினர்.
கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அஞ்சல்கள் வருவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
''இங்குள்ளவர்கள் வருத்தப்படுகின்றனர். மேலும் அந்த காகத்துக்கு மறைமுக மற்றும் சற்று வெளிப்படையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன,'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கனடா அஞ்சல் நிறுவனத்தில் இருந்து பெர்க்மென்னுக்கு வந்த பதிலில், 'காகம் தாக்கும் என்று அறியப்பட்ட இடங்களில், அபாயம் இனி இல்லை என்று நிலை வரும்வரை தபால்களை விநியோகிக்காததன் மூலம் நாங்கள் எங்கள் ஊழியர்களை பாதுகாக்கிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.
கேனக்கின் `சமூக விரோத நடத்தை` என்பது குற்றம் நடந்த இடங்களில் தடயங்களை அழிக்கும் அளவுக்கு இட்டுச்சென்றுள்ளது.
2016ல் மே மாதத்தில் காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தலுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கத்தியைத் அது பாய்ந்து வந்து திருடியாகக் கூறப்படுகிறது.
கான்ஸ்டபிள்களில் ஒருவர் துரத்தியபோது காகம் அக்கத்தியை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வான்கூவரில் காகத் தாக்குதல்கள் சாதாரணமாக நடப்பவைதான் ; 'பறவைகளின் 'தாக்குதல்கள்' பற்றிய தரவுகளை சேகரிக்கும் ஒரு ஆன்லைன் தளம் ஒன்று கூட காகத் தாக்குதல்கள் நடக்கும் இடங்களை வரை படமாகக் காட்டுகிறது.
வடையைத் திருடிய காகத்தின் கதையைக் கேட்டிருக்கிறோம். இது கத்தியைத் திருடிய கனடா காகம் !
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்