You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடு வானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற அமெரிக்க பயணி
விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்றதால் லாஸ் ஏஞ்சலசில் இருந்து ஹூஸ்டன் சென்ற விமானம் ஒன்று திசை திருப்பப்பட்டதாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகளால் பெயர் வெளியிடப்படாத ஒரு பெண், இரண்டு வாரங்களுக்கு முன் பணியில் இணைந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 4519-ல் பயணம் செய்த பயணி ஒருவர் KHOU-TV செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறும் போது, ஞாயிற்றுக்கிழமை காலையில் விமானத்தில் ஏறியதில் இருந்தே யூகிக்க இயலாத அளவிற்கு அந்த பெண் நடந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும், நாப்கினில் தனது பெயரைக் குறிப்பிட்டு தனக்கு உதவுமாறும் அவர் எழுதியதாக அந்த பயணி தெரிவித்தார்.
`ஏதோ சரியில்லை என்று எனக்கு தெரியும்` என்று குறிப்பிட்ட அந்த பயணி, லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே அந்த பெண்ணின் நடத்தை அனைவரின் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
`தொலைக்காட்சிகளில் பார்ப்பது போன்று அது மிகவும் விநோதமாக இருந்தது. இந்த மாதிரி சம்பவம் நடக்கும் ஒரு விமானத்தில் நீங்களும் பயணம் செய்வோம் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள் ` என்றும் அந்த பயணி குறிப்பிட்டுள்ளார்.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் இது குறித்து குறிப்பிடுகையில், விமானத்தில் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறு தென்பட்டதாக விமான ஊழியர்கள் புகாரளித்ததை அடுத்து, டெக்சாஸ் மாகானத்தில் உள்ள கார்பஸ் கிரிஸ்டி விமான நிலையத்துக்கு விமானத்தை திருப்ப விமானி முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது.
கார்பஸ் கிரிஸ்டி விமான நிலைய காவல்துறையினர், ஹாஸ்டனை சேர்ந்த KTRK-TV செய்தி நிறுவனத்திடம் இது குறித்து தெரிவிக்கையில், தற்போது எஃப்.பி.ஐ (FBI) இதை விசாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
விமானத்தின் பின்புறம் இருந்த அவசர வழியில் உள்ள கதவை திறப்பதற்கு மிக நெருக்கமாக அவர் வந்ததாக அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணியான ஹென்ரிட்டா மொக்குவா தொலைக்காட்சி வலையமப்பு ஒன்றிடம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ` கதவில் இருந்த சட்டகத்தை கிழித்தெறிந்த அவர், இறுதியில் அதை உடைத்துவிட்டார் ` என்றும் மொக்குவா குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
பயணத்தின் போது, தனது இருக்கையில் உட்கார மறுத்த அந்த பெண் அரசாங்கத்தால் தான் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது பற்றி முறையிட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண் பயணியைத் தடுத்து வைத்த, பணியில் இல்லாத போலிஸ் அதிகாரி, பமீலா மின்ச்சூ என்று போலிசார் கூறினர்.
காவல்துறை அதிகாரி மின்ச்சூ தனது விடுமுறையை அவரது குழந்தைகளுடன் கழித்துவிட்டு டெக்சாசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்ததாக காவல்துறை உயர் அதிகாரி ரெக்ஸ் எவான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
காற்று அழுத்தத்தில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் கதவைத் திறக்க ஏறக்குறைய இயலாது என்பதே நிபுணர்கள் கூற்றாக இருக்கிறது. மேலும், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது கதவுகளை யாராலும் திறக்க இயலாத அளவிற்கு அவை பூட்டப்பட்டிருக்கும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்