கத்தாருக்கு அண்டை நாடுகளின் அசாதாரண நிபந்தனைகள்: விரிவான ஆய்வு
அண்டை நாடுகளுடனான பிரச்சனைக்கு தீர்வு காண, கத்தார் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் எனக் கேட்கப்பட்டவை என்னென்ன?

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக கூறி கத்தார் மீது தடை விதித்திருந்த அண்டை நாடுகள் மற்றும் கத்தார் இடையிலான சமாதான முயற்சிகள், முன்னேற்றங்கள் இல்லாமல் தோல்வியில் முடிந்தன.
சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரேய்ன் மற்றும் எகிப்து ஆகியவை தீவு நாடான கத்தாருக்கு ஒரு கோரிக்கை பட்டியலை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு 10 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
நெருக்கடியைச் சமாளிக்க கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நாடுகள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளை ஆராய்கிறார் பிபிசி அரபு செய்தியாளர் அமீர் ரவாஷ்.
ஊடகத்தை மூடு
நான்கு நாடுகளுடனான தோஹாவின் பிரச்சனையில் ஊடகமே மையமாக இருக்கிறது.
கத்தார் அரசு செய்தி நிறுவன இணையதளத்தில் வெளிவந்த ஒரு சர்ச்சைக்குரிய செய்தியால்தான், இந்த நெருக்கடியானது பலமாக தூண்டப்பட்டது.
கத்தரால் நிதியளிக்கப்படும் அல் ஜசீரா ஊடகத்தை "தேசத் துரோகத்தைத் தூண்ட " கத்தார் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன், ரியாத், அபுதாபி மற்றும் கெய்ரோவால் ``பயங்கரவாத`` குழு என முத்திரை குத்தப்பட்ட, முஸ்லிம் சகோதரத்துவத்துவ அமைப்புக்குப் பிரசார வாய்ப்பையும் அது வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
2014-ல் தோஹாவிற்கும் இதே நாடுகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி காரணமாக இருந்தது. அப்போதிலிருந்து அதன் எகிப்திய சேனலான முபாரார் மிஸ்ரர் (லைவ் எகிப்து) சேனலை அல் ஜசீரா நிறுத்திக் கொண்டது. கடந்த மாதம் அல் ஜசீராவின் வலைத்தளத்தை நான்கு நாடுகள் முடக்கின.
இதுவரை எதிர்ப்புத் தெரிவித்தல் என்ற நிலைப்பாட்டினையே கொண்டிருக்கும் கத்தார், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமானால், சர்வதேச வரைபடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவும் முக்கிய ஆயுதத்தை இழக்கும். ஏனெனில் அல் ஜசீரா, அவர்களின் மென்மையான அதிகாரத்துக்கான முக்கிய கருவி.
துருக்கிய இராணுவ தளத்தை மூடுவது
இந்த மாத தொடக்கத்தில் கத்தார் மீது அழுத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தபோது துருக்கி விரைந்து உதவியதுடன், துருக்கிய படைகளை கத்தாருக்கும் அனுப்ப அனுமதிக்கும் சட்டத்தையும் ஒப்புக் கொண்டது.
எனவே கத்தாரிகள் இந்த ராணுவ தளத்தை மூடவேண்டும் என்பது மற்றோரு கோரிக்கை.
துருக்கிய வானொலியான என்,டி.வி , துருக்கியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிக்காரி இசிக், படைகளைத் திரும்பப் பெரும் கோரிக்கையை நிராகரித்துள்ளார் என்று கூறுகிறது..

பட மூலாதாரம், AFP
இப்பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து கத்தாருக்கு உணவு மற்றும் மற்ற உதவிப்பொருட்களை துருக்கி அனுப்பிவருகிறது. `` மனிதநேயமற்ற தனிமைப் படுத்துதலால்`` ஏற்பட்ட விளைவுகளைச் சமாளிக்க கத்தாருக்கு உதவி செய்வோம் எனத் துருக்கி அதிபர் ரெசிப் தாயீப் எர்துவான் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே மத்திய கிழக்கில் உள்ள ஆல்-உபெட்டில், அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத் தளத்தை கத்தார் அனுமதித்திருக்கிறது. ஆனாலும்,
அண்டை நாடுகளுடனான பிரச்சனையில் வாஷிங்டன் தனக்கு ஆதரவளிக்காததால், தனது கூட்டாளியான துருக்கியையே கத்தார் தெளிவாக நம்பியிருக்கிறது.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவளிப்பதை நிறுத்துக
2011-ம் ஆண்டு முதல் நடந்த பிராந்திய அரசியல் மாற்றங்களின் போது கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகள், எதிரெதிர் பக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தன.
எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி 2013-ல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட போது, முஸ்லிம் சகோதரத்துவத்துவ உறுப்பினர்களுக்கு கத்தார் பாதுகாப்பான புகலிடம் அளித்தது.

பட மூலாதாரம், EPA
2014-ல் அண்டை நாடுகளுடனான ராஜாங்க பதற்றத்திற்கு பிறகு, முஸ்லிம் சகோதரத்துவத்துவ குழுவின் முக்கிய நபர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு தோஹா கேட்டுக்கொண்டது.
ஆயினும், இஸ்லாமியவாதிகளுக்கான கத்தாரின் ஆதரவு முறிந்துவிட்டது என்பதாக இது வெளிப்படவில்லை.
மற்ற ``பயங்கரவாத`` குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக கத்தார் குற்றம் சாட்டப்பட்டதுடன், அதனுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை ரியாத், அபுதாபி, பஹ்ரெய்ன் மற்றும் எகிப்து ஆகியவை அறிவித்தன.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறப்படுவதை கத்தார் உறுதியாக நிராகரிக்கிறது.
இரானுடன் தூரத்தில் இருப்பது
பல ஆண்டுகளாக கொந்தளிப்பில் இருக்கும் இந்த வளைகுடா பகுதியில் , செளதி அரேபியா இரானை தன் பரம எதிரியாக நடத்தி வருகிறது.
இந்த இரண்டு நாடுகளும் சிரியா மற்றும் ஏமனின் போரிடும் தரப்புகளை ஆதரித்து வருகின்றன.

பட மூலாதாரம், AFP
செளதி அரேபியாவின் கிழக்கில் உள்ள ஷியா பிரிவினர் வசிக்கும் பகுதியான கதீப் ஆளுநகரத்தில் இரான் ஆதரவளிக்கும் தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதாக சவூதி அரேபியா கத்தார் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்துள்ளது.
இரானுடனான கத்தாரின் உறவு என்பது, கத்தாரின் அண்டை நாடுகள் இரானுடன் கொண்டிருக்கும் அணுகுமுறையை ஒத்தது இல்லை.
இந்த பொருளாதார தடையால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க இரான் பல விமானங்கள் மூலம் கத்தாருக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது.
செளதிஅரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் வான் வெளிகளை கத்தார் நாட்டு விமானங்களுக்கு மூடிய பின்னர், இரான் தன வான் எல்லைகளை அவ்விமானங்களுக்குத் திறந்தது.
10 நாட்களில் அல்ஜசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்தனை
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













