You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க - சீன பேச்சுவார்த்தைகளை ஓரங்கட்டிய வட கொரிய ராக்கெட் சோதனை
வட கொரிய ராணுவம் புதிய உயர் செயல்திறன் ராக்கெட் இயந்திரத்தை சோதனை செய்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை தனது நாட்டின் புதிய ராக்கெட் தொழில்துறையின் ''புதிய பிறப்பு'' என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்ததாக அரசு ஊடகமான கே. சி. என். ஏ(KCNA) கூறியுள்ளது.
வட கொரியா உலகத் தரத்தில் செயற்கைக்கோளை ஏவும் திறன் அடைய இந்த இயந்திரம் உதவும் என்று அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் முக்கிய நட்பு நாடான சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வருகைதரும் சமயத்தில், வேறு எங்கும் உறுதிப்படுத்தப்படாத இந்த முன்னேற்றம் நடந்துள்ளது.
புதிய ராக்கெட் சோதனையை கிம் நேரடியாக மேற்பார்வை செய்தபிறகு, அவர், ''நாம் இன்று அடைந்த, புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வெற்றியின் முக்கியத்துவத்தை இந்த உலகம் வெகுவிரைவில் அறியும்,'' என்று வலியுறுத்தியதாக அரசு ஊடகம் கூறுகின்றது.
தொடர்புடைய செய்திகள்:
வடகொரியாவின் அணுஆயுதத் திறன் மீதான பதட்டம் டில்லர்சனின் கிழக்காசிய பயணத்தில் ஆதிக்கம் செலுத்தும் விஷயமாக உள்ளது.
தென் கொரியா அல்லது அமெரிக்க படைகளை வட கொரியா அச்சுறுத்தினால், அதற்கு அமெரிக்க ராணுவம் பதில் அளிக்கும் என்று கடந்த வெள்ளியன்று தென்கொரியாவில் டில்லர்சன் தெரிவித்திருந்தார்.
கடந்த சனியன்று, டில்லர்சன் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிறகு, வடகொரியா ''வேறு பாதையில்'' செல்வதற்கும், அதன் ஆயுத திட்டங்களில் இருந்து வட கொரியாவை நகர்த்த அமெரிக்கா மற்றும் சீனாவும் இணைந்து வேலை செய்யப்போவதாகவும் உறுதிபூண்டனர்.
சீன அதிபர் ஷின் ஜிங்பிங்குடன் டில்லர்சன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை மீதான கவனத்தை, வட கொரியாவின் ராக்கெட் சோதனை அறிவிப்பு, ஓரங்கட்டியது என பிபிசியின் சீன மொழி பிரிவின் ஆசிரியர் கேரி கிரேசி கூறுகிறார்.
வட கொரியா ஐந்து அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளதுடன் ஏவுகணைகளை செலுத்தும் நடவடிக்கைகளையும் செய்திருக்கிறது.
சமீபத்தில், கிம் ஜோங்- உன், வடகொரியா விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்யப்போவதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்