அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுடப்பட்டு மரணம்
வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் பேஸ்பால் பயிற்சியின்போது குடியரசு கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்து விட்டதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ILLINOIS STATE'S ATTORNEY OFFICE
வர்ஜினியா மாகாணத்தில், அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு பூங்காவில் பதுங்கி இருந்து, அதிகாலையில் நிகழ்ந்தப்பட்ட அத்தாக்குதலில் காயமடைந்த ஐவரில், பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் கொறடா ஸ்டீவ் ஸ்கெலிசும் ஒருவராவார்.
இல்லினோய் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான ஜேம்ஸ் டி ஹோட்கின்சன் எனும் அத்தாக்குதலாளி போலீசார் உடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இரு அதிகாரிகளுக்கு இத்தாக்குதலில் உயிராபத்தை விளைவிக்காத காயங்கள் ஏற்பட்டன.
சமீப காலம்வரை சுயதொழில் செய்து வந்த ஹோட்கின்சன், கட்டிட ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.
அவர் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸுக்கு ஆதவாராக வாக்கு சேகரித்துள்ளார்.
ஹோட்கின்சனுக்கு உரித்தானதாகத் தோன்றும் முகநூல் கணக்கு குடியரசு கட்சி மற்றும் அதிபர் டிரம்புக்கு எதிரான பதிவுகளால் நிரம்பியுள்ளது.
வெர்மோன்ட் மாகாணத்தில் சார்பில் செனட் சபை உறுப்பினராக உள்ள சாண்டர்ஸ், இந்த வெறுக்கத்தக்க சம்பவத்தால் தான் மிகவும் வேதனையுற்றுள்ளதாகவும், ஹோட்கின்ஸனின் செயலைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை 'மிக மிக கொடூரமான தாக்குதல்' என்று அதிபர் டிரம்ப் விவரித்துள்ளார்.
'நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்ற சமயங்களில், நாட்டின் தலைநகரில் சேவையாற்றும் ஒவ்வொருவரும் இங்கு இருப்பதன் காரணம், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் நம் நாட்டை நேசிப்பதே என்பதை நினைவில்கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும்,' என்றும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












