You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்
மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.
குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டு, 64 பேர் காயமடைந்த மான்ச்செஸ்டர் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் சல்மான் அபேடி என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.
நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில், இதுகுறித்த கவலைகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பகிர்ந்து கொள்வார்.
பிற செய்திகள் :
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் சாதாரண இருதரப்பு புலனாய்வு உறவுகளை தொடரலாம் என்று நம்பிக்கை வெளியிட்டாலும், தற்போது அமெரிக்கா மீது அதிருப்தியில் இருப்பதாக பிபிசி புரிந்து கொண்டுள்ளது.
களத்தில் விசாரணையை முன்னெடுத்து செல்லும் புலனாய்வு அமைப்பு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அமைப்புக்கு அந்தத் தகவல்களை அளிக்கிறது. அது பின்னர் அரசின் அனைத்து துறைகளுக்கும் பகிரப்படுகிறது. அத்துடன், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து இடையிலான ஐந்து நாடுகள் புலனாய்வு ஒப்பந்தத்தின்படி, (Five Eyes intelligence sharing agreement ) மீதமுள்ள நான்கு நாடுகளுக்கும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
லிபிய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது அபேடி என்பவரால் நடத்தப்பட்ட மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரியில் அபேடியை அறிந்த இரண்டு பேர், அவரது தீவிரவாத கருத்துகள் குறித்து அவசரத் தொலைத் தொடர்பு எண்ணுக்கு அழைத்து காவல்துறையினரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
சிதறிக்கிடந்த பொருட்களின் (இடிபாடுகளின்) புகைப்படங்கள் இங்கிலாந்தின் விருப்பத்திற்கு எதிராக அபிடியின் அடையாளத்தை, அமெரிக்கா வெளிப்படுத்தியதால் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் "எரிச்சலடைந்தார்" என்றும், இதுபோன்ற செயல்கள் "மீண்டும் நடக்கக்கூடாது" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள் :
எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சிதறியுள்ள பொருட்கள் கொண்ட புகைப்படங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டதற்கு, பிரிட்டன் சிவில் நிர்வாக அதிகாரிகள் (வொயிட் ஹால்) மற்றும் பிரிட்டன் காவல்துறை உயரதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.
புகைப்படங்கள் கசிந்ததற்கு வெள்ளை மாளிகை காரணம் அல்ல, அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்பே காரணம் என இங்கிலாந்து அதிகாரிகள் நம்புவதாக பிபிசி பாதுகாப்பு நிருபர் கோர்டன் கோரேரா தெரிவித்தார்.
அமெரிக்கா இரண்டாவது முறையாக இதுபோன்ற தகவலை கசியவிட்டிருப்பதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்காவின் மீது "அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும்" ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.
இது நம்பிக்கையை மீறி "அங்கீகாரமற்ற வெளிப்படுத்தல்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான புலன் விசாரணையை" சிதைத்துவிட்டதாகவும் பிரிட்டனின் தேசிய காவல்துறை தலைவர்கள் சபை கூறுகிறது.
சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியானதால், அவருடன் தொடர்புடையவர்களை கைது செய்ய 36 மணி நேரமானது என்றும், எந்தவித துப்பும் இன்றி, பயங்கரவாத எதிர்ப்புத் துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகைப்பட கசிவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள கிரேட்டர் மான்சசெஸ்டர் மேயர், இது குறித்து அமெரிக்க தூதரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2005, ஜூலை ஏழாம் தேதியன்று நடைபெற்ற லண்டன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த புலனாய்வு தகவல்களை ஏற்கனவே அமெரிக்கா வெளியிட்டிருப்பதை குறிப்பிட்டு, தகவல்களை கசியவிடுவது அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றும், அந்த சமயத்தில் லண்டன் காவல்துறைத் தலைவராக இருந்த லார்ட் பிளேர் கூறுகிறார்.
"அந்த சம்பவத்தின்போது குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய முழுமையான விவரங்களை அமெரிக்கா வெளியிட்டதற்கு பிறகான நிலையை தற்போதைய தகவல் கசிவு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார்.
"விஷயங்களை வெளியிடும் விதத்தில் அமெரிக்கா வித்தியாசமாகவே செயல்படுகிறது. இது மிகவும் கடுமையான விதிமீறல், எனவே நான் அச்சப்படுகிறேன்" என்று லார்ட் பிளேர் கூறுகிறார்.
தாக்குதல் குறித்த பிற முன்னேற்றங்கள்:
• கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் விதிங்டனில் உள்ள ஒரு முகவரியில் வியாழனன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டது உட்பட, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எட்டு பேரை காவலில் எடுத்துள்ளனர்.
• இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரிட்டன் நேரப்படி காலை 11 மணிக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியை இங்கிலாந்து அரசு அறிவித்தது.
• கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சியினர் உள்ளூர் பொதுத் தேர்தல் பிரசாரத்தை வியாழனன்றும், தேசிய தேர்தல் பிரசாரத்தை வெள்ளியன்றும் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
• ஐரோப்பிய லீக் கால்பந்துப் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்கள், திங்கட்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்