சீனாவின் தந்த வர்த்தகத்தடை யானைகளை காக்குமா?
சீனாவின் யானைத்தந்தச்சிற்பம் செதுக்கும் கலை பலநூற்றாண்டுகள் பழமையானது. ஆனால் அந்த சிற்பக்கலை செதுக்கி விற்கும் வர்த்தகத்தில் சரிபாதிக்கு இன்று சீன அரசு தடைவித்திருக்கிறது.
மீதமுள்ள பாதி இந்த ஆண்டின் இறுதியில் தடுக்கப்படும். அடுத்த ஆண்டுமுதல் யானைத்தந்த வர்த்தகம் என்பது சீனாவில் முற்றாக தடை செய்யப்பட்ட நடவடிக்கையாக இருக்கும்.

இந்த வர்த்தகம் மூடப்படுவதை நேரில்கண்டு உறுதி செய்ய அருகிவரும் உயிரின வர்த்தகத்துக்கான ஐநா பிரதிநிதி ஜான் ஸ்கேன்லன் சீனா வந்துள்ளார்.
"சீனாவின் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. யானைத் தந்தக்கடை மூடப்படுவதை நான் இங்கே நேரில் கண்டேன். இப்படியான இன்னொரு தந்தக்கடை இந்த ஆண்டின் இறுதியில் மூடப்பட இருக்கிறது", என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
சீனாவின் இந்த முடிவு பெருமளவு தாமதமானது என்றே கூறலாம். காரணம் ஆப்ரிக்க யானைகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்தயானைகளில் 70 சதவீதமானவை சீனாவின் தந்த தேவைகளுக்காகவே கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது.
இன்று மூடப்படும் யானைத்தந்தவர்த்தக நிறுவனங்களில் ஒன்றை நடத்துபவர் லியு ஃபெங்காய்.
தனது தந்தங்கள் அனைத்துமே சீனஅரசால் அங்கீகரிக்கப்பட்ட தந்தங்களே என்று அவர் வலியுறுத்தினார்.

"நான் பெரும் வருத்தத்தில் இருக்கிறேன். சீன அரசின் தடையால் சட்டவிரோத தந்த வர்த்தகத்தை தடுக்கமுடியாது. மாறாக இந்த தடை அதை ஊக்குவிக்கும்", என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ஆனால் தந்த வர்த்தக தடைக்காக குரல்கொடுத்த பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் போன்ற செயற்பாட்டாளர்கள் முரண்படுகின்றனர்.

சீனாவின் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட யானைத்தந்த சிற்பக்கூடங்கள், தந்த வர்த்தகம் ஏற்கத்தக்கது என்கிற கருத்தை ஏற்படுத்தி கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பை உருவாக்குமென அவர்கள் வாதாடுகிறார்கள்.
எனவே சீனாவின் சட்டப்படியான யானைத்தந்த வர்த்தகத்தை முழுமையாக மூடுவது மிகவும் அவசியம் என்பது அவர்கள் வாதம்.

முழுமையான தடை மட்டும் உரிய பலன் தருமென உறுதியாக கூறமுடியாது. தந்தத்தை இணையத்தில் விற்பது சீனாவில் தடுக்கப்பட்ட செயல். ஆனால் இணையத்தில் மிக எளிதில் பிபிசி செய்தியாளர்களால் அதை வாங்க முடிகிறது.
இந்த தந்தம் ஆப்ரிக்காவைச் சேர்ந்ததா என்று கேட்டதற்கு ஆமென இணையத்தில் பதில் வந்தது.

பட மூலாதாரம், EPA
சீன அரசின் புதிய தடை மட்டும் குற்றக்கும்பல்களை முழுமையாக தடுத்துவிடாது என்பதை பிபிசி புலனாய்வு காட்டுகிறது.
ஆனாலும் இது மிகப்பெரிய, முக்கியமானதொரு முடிவு. பழமையான விலங்கைக்காக்க சீனா தனது தொன்மையான கலைவடிவத்தை தியாகம் செய்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













