வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மெக்டொனால்டு நிறுவனம் கசியவிட்டது அம்பலம்
மெக்டொனால்டின் இந்திய விநியோக செயலி, சுமார் 2.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் பற்றிய தரவுகளை கசியவிட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மோசமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சர்வரில் இருந்து, வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்னஞ்சல்கள், வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி தொடர்பு எண்கள் போன்ற தரவுகளை யார் வேண்டுமானாலும் அணுகமுடியும், வெறுமனே ஒரு கோரிக்கையை விடுத்து, வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற முடியும் என பாதுகாப்பு நிறுவனம் ஃபாலிபில் (Fallible) கூறுகிறது.
அந்த செயலியை தடை செய்துவிட்டதாக தெரிவித்த மெக்டொனால்ட் இந்தியா, மேம்படுத்தப்பட்ட பதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தென்னிந்தாயவிலும் மேற்கிந்திய பகுதிகளிலும் இருக்கும் மெக்டொனால்ட் உணவகங்களை மேற்பார்வையிடும் வெஸ்ட்-லைஃப் டெவலப்மெண்ட் நிறுவனம் தான் மெக்-டெலிவரி என்ற செயலியை இயக்குகிறது.
அந்த செயலியில், கடன் அட்டை எண்கள், கடவுச்சொற்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற எந்தவொரு குறிப்பிடத்தக்க நிதித்தரவுகளும் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு மெக்டொனால்ட்ஸ் இந்தியா அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தங்களது வலைதளமும், செயலியும் பயன்படுத்துவதற்கு எப்போதுமே பாதுகாப்பானதுதான் என்றும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுவதாகவும், மெக்டொனால்ட் தெரிவித்துள்ளது.
தண்டனை இல்லை
செயலி மேம்படுத்தப்பட்டதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலும் தரவுக் கசிவு இருப்பதாக கூறும் ஃபாலிபில், கசிவின் அளவு பற்றி எதுவும் கூறவில்லை.
மெக்டொனால்ட்-இடம் இது குறித்து தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் பதில் வருவதற்காக காத்திருப்பதாக ஃபாலிபில் தெரிவிக்கிறது.
சர்வரில் இருந்து தகவல்கள் கசிந்தது தொடர்பாக அந்த செயலியை பயன்படுத்தும் ஒருவர், ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக தெரிவதாக ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
தரவுகளை பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் இந்தியாவில் குறைவாகவே இருப்பதை சுட்டிக்காட்டும் ஃபாலிபில், தரவுக் கசிவு தொடர்பாக அர்த்தமுள்ள தண்டனைகள் ஏதும் இல்லாததால், பல நிறுவனங்கள் தரவுகளை பாதுகாப்பதில் கவனக்குறைவாக இருப்பதாக கூறுகிறது.
இந்திய நிறுவனங்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தரவுக் கசிவு சம்பவங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்திய நிறுவனங்கள், தனிமனிதர்கள் மற்றும் கட்டணம் செலுத்துவது தொடர்பான (பேமெண்ட்) தரவுகளை கசியவிடாமல் இருந்தால், அது தங்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












