ஹாங்காங் சுதந்திரத்திற்கு ஆதரவான இரு செயற்பாட்டாளர்களுக்கு சீனா தடை
ஹாங்காங்கின் உள்ளூர் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஹாங்காங் சுதந்திரத்திற்கு ஆதரவான இரண்டு செயற்பாட்டாளர்கள், உறுப்பினர்களாக பதவி பிரமாணம் ஏற்பதில் சீனா தலையிட்டு அவர்களை தடைசெய்திருக்கிறது.

பட மூலாதாரம், AFP
சீனாவின் இந்த ஆணையை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக ஹாங்ஹாங்கின் தலைமை செயலதிகாரி லியுங் ச்சுங்-இங் தெரிவித்திருக்கிறார்.
இந்த இரண்டு செயல்பாட்டாளர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக ஹாங்காங் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் சீனாவின் இந்த தலையீடு வந்திருக்கிறது.
இந்த செயற்பாட்டாளர்கள் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்ததால் அவர்கள் எடுத்துகொண்ட முதல் பதவி பிரமாணம் செல்லாததாக்கப்பட்டது.
ஹாங்காங்கிலுள்ள கருத்து சுதந்திரத்தையும், நீதி அமைப்பின் சுதந்திரத்தையும் சீனா குலைப்பதாக ஜனநாயக இயக்கம் நம்புகிறது.
இது பற்றி கவலை வெளியிட்டுள்ள பிரிட்டன் அரசு, 1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கை சீனாவிடம் தான் ஒப்படைத்தது முதல் நடைமுறையில் இருந்து வருகின்ற "ஒரு நாடு இரண்டு அமைப்புக்கள்" என்ற கொள்கைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் சீன மற்றும் ஹாங்காங் அரசுகள் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது.
சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தை கலைக்க ஹாங்காங் காவல்துறையினர் மிளகு தெளிப்பான்களை பயன்படுத்தியுள்ளனார்.








