குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய கருத்தால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர்

தம்பதிகள் பெற்றோராக மாற அவர்களுக்கென ஒரு இடம் தேவையில்லை என சிங்கப்பூர் அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் அமைச்சர் ஜோசபின் தியோ (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Suhaimi Abdullah/Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூர் அமைச்சர் ஜோசபின் தியோ (கோப்புப்படம்)

இளவயதினர் அரசு குடியிருப்பு வசதிக்காகக் காத்திருக்க வேண்டியிருப்பதால்தான், அவர்கள் குழந்தைகள் பெற்றுகொள்வதில்லையா என்ற கேள்விக்கு ஜோசபின் தியோ, ''உடலுறவு கொள்வதற்கு உங்களுக்குச் சிறிய இடம் தான் தேவை'' என பதிலளித்தார்.

சிங்கப்பூர், குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் அதன் பிரஜைகளை , குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறது.

தியோவின் பேட்டியைக் கொண்ட ஒரு பேஸ்புக் பதிவு சுமார் 7,000 முறைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. பலர் அவரது கருத்தை விமர்சனம் செய்துள்ளனர்.

ஒருவர், மக்களின் நலனை விட புள்ளிவிவரங்களைப் பற்றி தியோ அதிக அக்கறை காட்டுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.