You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி வசமாகும் என்டிடிவி பங்குகள் - கார்ப்பரேட் கையில் இந்திய செய்தி நிறுவனம்
என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வரும் பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அந்தப் பங்குகளை கார்ப்பரேட் பெரு நிறுவனமான அதானி மீடியா குழுமம் வாங்க உள்ளது. இப்படி ஒரு நிறுவன பங்குகளை அதன் நிறுவனங்கள், பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கப்படும் செயலை 'முறையற்ற கையகப்படுத்துதல்' அல்லது ஆங்கிலத்தில் 'ஹோஸ்டைல் டேக்ஓவர்' என்று தொழிற்துறையினர் அழைக்கின்றனர்.
தங்களுடைய நிறுவன பங்குகளை அதானி குழுமம் வாங்கப்படுவதாக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை மாலையில் தகவல் வெளிவந்த நிலையில், ஒரு அறிக்கையை என்டிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் கையகப்படுத்தும் முயற்சி ஒரு முறையற்ற முயற்சி என்பது தெரிய வருகிறது. புது டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (NDTV) அல்லது அதன் நிறுவன மேம்பாட்டாளர்களுடன் எந்த விவாதமும் நடத்தப்படாமல், ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்டின் 99.50% கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான உரிமையை விஷ்வபிரதான் கமர்ஷில் பிரேவைட் லிமிடெட் (VCPL) பயன்படுத்தியதாக விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம் என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 2009-10இல் என்டிடிவி நிறுவனர்களான ராதிகா, பிரனாய் ராய் ஆகியோருடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசிபிஎல் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. அதில் 19,90,000 வாரன்ட்டுகளை RRPRH இன் ஈக்விட்டி பங்குகளாக தலா ₹10/ என்ற அளவில் மாற்ற விசிபிஎல் தனது விருப்பத்தைப் பயன்படுத்தியதாகவும், அந்த வகையில் மொத்தம் 1.99 கோடி ஆர்ஆர்பிஆர்ஹெச் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவியை வாங்கும் அதானி குழும நிறுவனம் - அறிய உதவும் தகவல்கள்
ஆகஸ்ட் 23 அறிவிப்புக்கு முன் என்டிடிவியில் அதன் மேம்பாட்டாளர்களின் பங்கு என்னவாக இருந்தது?
பிரனாய் ராய்: 15.94%
ராதிகா ராய்: 16.32%
பிரனாய் மற்றும் ராதிகா ராய் கூட்டாக ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை வைத்துள்ளனர். அந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம் என்டிடிடியில் 29.18% பங்குககளை வைத்திருக்கிறது. இப்போது அதானி குழுமம் வசம் ஆர்ஆர்பிஆர் வருகிறது.
என்டிடிவியின் மொத்த மேம்பாட்டாளர்களின் பங்கு 61.45%.
ஆகஸ்ட் 23 அன்று என்ன நடந்தது?
ஆகஸ்ட் 23ஆம் தேதி, அதானி என்டர்பிரைசஸ் தமது முழுமையான துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் மூலம் விஷ்வபிரதான் கமர்ஷியல் தனியார் நிறுவனத்தை கையகப்படுத்தியது.
முன்னதாக, 2009இல் விஷ்வ பிரதான் கமர்ஷியல் தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ. 350 கோடியை என்டிடிவி வாங்கியது. அந்த கடன் ஒப்பந்தப்படி வாங்கிய கடனை, எந்த நேரத்திலும் ஆர்ஆர்பிஆர் ஈக்விட்டியாக விசிபிஎல் மாற்றலாம். இந்த நிலையில், ஆகஸ்ட் 23, 2022 அன்று என்டிடிவியில் 29 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஆர்ஆர்பிஆர் நிறுவன ஒட்டுமொத்தமாக தன்வசமாக்கும் உரிமையை விசிபிஎல் நிறுவனம் தேர்வு செய்தது.
என்சிசிவி மேம்பாட்டாளர்கள் எப்படி எதிர்வினையாற்றினர்?
என்டிடிவியில் 29.18 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை, தங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையோ, என்டிடிவி நிறுவனர்களின் ஒப்புகையின்றியோ அதானி குழுமம் செய்துள்ளதாக என்டிடிவி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
தங்களுடைய நிறுவனத்தை கையகப்படுத்தும் அதானி குழும நடவடிக்கையை சட்டம் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் எதிர்க்கும் வாய்ப்பை மதிப்பிட்டு வருவதாக என்டிடிவி மேம்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபி, ஒரு நிறுவனத்தில் 15 சதவீத பங்குகளுக்கும் அதிகமாக வாங்கினால், எஞ்சிய பங்குதாரர்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்திலேயே பங்குகளை வைத்திருக்கவோ அவர்களின் பங்குகளை விற்கவோ விருப்பம் கொடுக்கலாம் என்று கூறுகிறது. இப்படி செய்வது திறந்தவெளியில் பங்குகளை விற்கத் தூண்டும். காரணம், அதானியின் ஊடக நிறுவனம் ஏற்கெனவே 29% பங்குககளை கட்டுப்படுத்தும். அந்த அடிப்படையில் 26% பங்குகளை வாங்கும் திறந்தவெளி விற்பனை வாய்ப்பு தூண்டப்படும்.
அதானியின் திறந்தவெளி சலுகை என்ன?
ஒரு என்டிடிவி பங்கின் திறந்தவெளி விலை ரூ. 294 ஆக கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய சந்தையில் உள்ள என்டிடிவியின் பங்கு விலையை விட 20 சதவீதம் குறைவாகும். எனவே, எந்தவொரு பங்குதாரரும் இந்த திறந்தவெளி விலையில் தங்களுடைய பங்குகளை விற்க மாட்டார்கள். அதே சமயம், இந்த திறந்தவெளி வாய்ப்பு வெற்றிகரமாக அமைந்தால், அதானி குழுமம், என்டிடிவியின் 55.18 சதவீத பங்கை தன்வசமாக்கலாம். அப்படி நடந்தால் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் அதானி குழுமம் வசம் வந்து விடும்.
இரண்டு நாட்கள் கெடு விதித்த அதானி நிறுவனம்
என்டிடிவி நிறுவனர்கள் மற்றும் நிறுவனத்திடம் எவ்வித தகவலையும் பெறாமல், ஆலோசனை செய்யாமல், ஒப்புகை பெறாமல் தமது உரிமையை விசிபிஎல் நிறுவனம் இன்று செலுத்திய தகவலே இன்றுதான் தெரிய வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களில் எந்த மாற்றமும் இல்லை என்று பங்குச்சந்தையிடம் என்டிடிவி தெரிவித்துள்ளது என்று அறிக்கையில் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஆர்ஆர்பிஆர்ஹெச் நிறுவனத்திடம் அதன் வசம் உள்ள எல்லா பங்குகளையும் இரண்டு நாட்களுக்குள் விசிபிஎல் நிறுவனத்திடம் மாற்றும்படி கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23, 2022 தேதியிட்ட விசிபிஎல்-இன் பொது அறிவிப்பின் நகலும் கிடைக்கப்பெற்றுள்ளது. என்டிடிவியின் வோட்டிங் ஷேர் மூலதனத்தில் 26% வரை ஒரு பங்கிற்கு ₹ 294 (16,762,530 வரை முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகள்) பெறுவதற்கான திறந்தவெளி வாய்ப்பை. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் கோரும் (பங்குகள் மற்றும் கணிசமான பங்குகளை கையகப்படுத்தல்) விதிமுறைகள், 2011இந்படி வழங்குவதாகவும் பொது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்டிடிவி திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தைக்கு தெரிவித்த தகவலின்படி ராதிகா, பிரனாய் ராய் ஆகியோர் இப்போது என்டிடிவி உரிமையை மாற்றுவது அல்லது பங்குகளை விலக்குவது குறித்து எந்த நிறுவனத்துடனும் விவாதிக்கவில்லை. இருவரும் தனித்தனியாகவும் தங்கள் நிறுவனமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் மூலம் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 61.45%ஐ தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்.என்டிடிவி நிறுவனமும் அதன் நிறுவனர்களும் தங்களுடைய பங்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பங்குச்சந்தை வர்த்தக அமைப்புகளிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டிய அவசியம் மற்றும் கடமை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அப்படி மாற்றம் நேர்ந்தால் முதலில் அதை உரிய அமைப்பிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்று என்டிடிவி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எப்படி சாத்தியமாக்கியது அதானி நிறுவனம்?
விஷ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) - அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு (ஏஇஎல்) சொந்தமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் (ஏஎம்என்எல்) முழுமையான துணை நிறுவனமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் தனியார் நிறுவனத்தை நடத்தும் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது.
இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம்தான் என்டிடிவியின் மேம்பாட்டுக் குழு நிறுவனமாகும். தனக்குள்ள உரிமையின் மூலம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தில் 99.99 சதவீத பங்குகளை ஈக்விட்டு பங்குகளாக மாற்றுகிறது ஏஎம்ஜி நிறுவனம். இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம் என்டிடிவியில் 29.18 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இத்தகைய சூழலில் திறந்தவெளி வாய்ப்பை உருவாக்கியதன் மூலம் என்டிடிவியில் மேலும் உள்ள 26 சதவீத பங்குகளை அதானி நிறுவனத்தால் கையகப்படுத்த முடியும்.
என்டிடிவி நிறுவனம் வசம் தற்போது மூன்று தேசிய செய்தி சேனல்கள் உள்ளன. அவை NDTV 24×7, NDTV இந்தியா மற்றும் NDTV ப்ராஃபிட் என்ற வர்த்தக சேனல். இந்த சேனல்கள் இணையதளங்கள் மற்றும் அவற்றுக்கென சமூக பக்கங்களையும் கொண்டுள்ளன. இதில் NDTV 123 கோடி ரூபாய் EBITDA எனப்படும் வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் முறையில் ரூ. 421 கோடி வருவாயையும், 2022-23 நிதியாண்டில் நிகர லாபம் 85 கோடி ரூபாயையும் குறைந்த கடனுடன் பதிவு செய்துள்ளது.
"இந்த கையகப்படுத்துதல் செயல்பாடு, புதிய யுக ஊடகங்களின் பாதையை அமைக்கும் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் இலக்கு சார்ந்த பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" என்று அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் புகாலியா கூறியிருக்கிறார்.
இந்திய மட்டுமின்றி உலக அளவில் விமான நிலையங்கள், துறைமுகங்களை இயக்குதல், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், நிலக்கரி மற்றும் எரிவாயு வர்த்தகம் போன்ற வணிகங்களில் அதானி குழுமம் ஏழு நிறுவனங்களை நடத்தி வருகிறது.
நிலக்கரி, எரிவாயு, கனிம வள துறைகளில் அதானி குழுமம், மற்றொரு இந்திய பெருந்தொழில் அதிபராந முகேஷ் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு போட்டியாக உள்ளது. அந்த ரிலையன்ஸ் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு தற்போது என்டிடிவி பங்குககளை அதானி குழும நிறுவனம் வாங்கிய அதே உத்தியைப் பயன்படுத்தி நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குககளை வாங்கி பிறகு அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.
நெட்வொர்க் 18 நிறுவனம் இந்தியாவில் பிரபல செய்தி நிறுவனங்களான நியூஸ்18, இடிவி, சிஎன்பிசி சேனல்களையும் ஓடிடி தளங்களையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் முழுமையாக அதன் வசம் கொண்டு வந்து விட்டால், கார்ப்பரேட் உலகில் இதுநாள்வரை கோலோச்சி வரும் இரு பெரும் தொழில் முதலைகளான அதானி குழுமமும் ரிலையன்ஸ் குழுமம் இனி இந்திய தனியார் தொலைக்காட்சி உலகிலும் ஆதிக்க சக்தியாக விளங்கக் கூடும் என்று தொழிற்துறையினர் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்