You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் அதானி மின் திட்டம்: மோதி பற்றிய சர்ச்சையை விளக்க வலுக்கும் கோரிக்கைகள்
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தங்களை கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ.பெர்டினன்டோ தெரிவித்திருந்தார்.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) முன்னிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த கருத்தை அவர் கூறினார். எனினும், அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் இந்த கருத்தை அவர் திரும்பப் பெற்றார்.
இதேவேளை, பெர்டினன்டோவின் கருத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக நிராகரித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டார்.
இந்த சர்ச்சை வலுப்பெற்ற நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சீ.பெர்டினன்டோ விலகியதாக, இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 13ஆம் தேதி கூறியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தின் நகலை இலங்கை நாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக பெர்டினன்டோ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனமும் இலங்கையும்
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 500 மெகாவாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அதானி நிறுவனம், இலங்கையுடன் உடன்படிக்கையொன்றை கையெழுத்திட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யும் வகையில், இலங்கை, அதானி நிறுவனத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டிருந்தது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், 51 வீதமான பங்கு அதானி நிறுவனத்திற்கும், 34 வீதமான பங்கு, இலங்கை நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும், 15 வீதமான பங்கு இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் உரித்தாகின்றது.
இந்த திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாகவே, மின்சார சபைத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் களத்தில் சர்ச்சை
பிரதமர் நரேந்திர மோதியின் குளறுபடிகள் பாக் நீரிணையையும் தாண்டி, தற்போது இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாக வெளியான தகவல் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்ட எம்.எம்.சீ.பெர்டினன்டோவிற்கு எதிராக சிறப்புரிமை யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
மின்சார சபையின் தலைவர் கோப் குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்திய தகவலை, பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டமையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரது சிறப்புரிமைகளையும் மீறியதாக அமையும் என அவர் கூறுகின்றார்.
''அவருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது தான் இடம்பெற்றது. நாடாளுமன்ற கோப் குழு முன்னிலையில் பொய் சொல்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமை என்ன என்று பெர்டினன்டோவிடம் நான் கேட்க விரும்புகின்றேன். பெர்டினன்டோவிற்கு எதிராக சிறப்புரிமையை மீறியமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற விதத்தில் யோசனையொன்றை நான் கொண்டு வருவேன். இந்த கருத்தை வாபஸ் பெற்றமைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை" என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
சட்டத்தரணிகளின் பார்வை
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) முன்னிலையில் வெளியிட்ட கருத்தை, மீளப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என இலங்கையின் பிரபல சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு மாத்திரமே கோப் குழுவிற்கு அங்கீகாரம் உள்ளதாக கூறிய அவர், அந்த குழுவிற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
இனிவரும் காலத்திலாவது கோப் குழுவிற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.
''கோப் குழுவிற்கு சட்ட அதிகாரம் கிடையாது. பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு, நாடாளுமன்றத்திற்குள் அரச நிறுவனங்களை அழைக்கின்றது. அந்த நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை வெளிக்கொணர்கின்றது. அதன் பின்னர் அடுத்த கட்டம் எதுவும் கிடையாது. வெட்கப்பட வேண்டியது மாத்திரமே இறுதியில் ஏற்படும். அரச நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். அரச நிறுவனங்கள் அதனை செய்ய தவறும் பட்சத்தில், கோப் குழுவினால் ஒன்றும் செய்ய முடியாது.
கோப் குழு முன்னிலையில் இவர் பொய் கூறினாலும், கோப் குழுவினால் ஒன்றும் செய்ய முடியாது. கோப் குழுவிற்கு உடனடியாக சட்ட ரீதியிலான அதிகாரத்தை வழங்க வேண்டும். ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. மோதிக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தற்போது பிரச்னையை எழுப்புகின்றார். இந்தியாவிற்குள் பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில், அவர் ராஜினாமா செய்தார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை யார் எடுப்பது? சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், அவர் பதவி விலகி விட்டார்" என சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா குறிப்பிடுகின்றார்.
சிறப்புரிமை யோசனையொன்றை கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினன்டோ அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணைகள் நடத்த முடியும் என்ற போதிலும், அவருக்கு தண்டனை வழங்க முடியாது என அவர் மேலும் கூறுகின்றார்.
இதனால், கோப் குழுவிற்கு சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், நாடாளுமன்றத்திற்கு அவர் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், நாட்டு மக்களுக்கு உண்மையையாவது தெரிந்துக்கொள்ள முடியும் என இலங்கையின் பிரபல சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்