இந்திய ஜிடிபி 0.4%: தொழில்நுட்ப மந்தநிலையில் இருந்து மீளும் வளர்ச்சி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கொரோனா பரவல் காரணமாக முதலிரண்டு காலாண்டுகளை மந்த நிலையில் எதிர்கொண்ட வேளையில், ஆறுதல் தரும் வகையில், மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி 0.4 சதவீதமாக பதிவாகியிருக்கிறது.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு தரவுகள், வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிடப்பட்டது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதம் சரிவடையலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். முன்பு இது 7.7 சதவீதமாக சரிவடையலாம் என கணிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதையொட்டி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு நாடுகளின் வளர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு விதிவிலக்கில்லாத வகையில், இந்தியாவில் முதல் காலாண்டிலேயே ஜிடிபி வளர்ச்சி 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் -23.9 சதவீதமாக சரிந்தது. இரண்டாவது காலாண்டில் அது -7.5 சதவீதமாக சரிந்தது. தற்போதைய அறிக்கையில் இந்த சரிவானது, ஏப்ரல் முதல் ஜூன் மாத முதலாம் காலாண்டில் -24.4 சதவீதமாகவும் இரண்டாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை -7.7 சதவீதமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தொழில் வாய்ப்புகளுக்கான சூழல் உருவாக்கப்பட்டது. அதன் தாக்கம் மெல்ல, மெல்ல எதிரொலித்ததன் விளைவாக தற்போது 0.4 சதவீத வளர்ச்சியை ஜிடிபி கண்டிருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இதே காலகட்டத்தில் அர்ஜென்டீனா -10.2 சதவீதம், பிரிட்டன் -7.8 சதவீதம், இத்தாலி -6.6 சதவீதம், தென்னாப்பிரிக்கா -6 சதவீதம், கனடா -5.2 சதவீதம், பிரான்ஸ் -5.0 சதவீதம், ஐரோப்பிய மண்டலம் -5.0 சதவீதம், மெக்சிகோ -4.5 சதவீதம், செளதி அரேபியா -4.1 சதவீதம் ஆக பதிவாகியிருந்தது.

தற்போதைய வளர்ச்சி காரணமாக, இந்தியா தொழில்நுட்ப ரீதியாக மந்த நிலையின் பிடியில் இருப்பதாக இருந்த கணிப்பு அல்லது எண்ணம் மாறத் தொடங்கிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை, எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி 0.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயம், காடு வளர்த்தல், மீன்பிடி துறைகள் 3.9 சதவீதமும், தயாரிப்புத்துறை 1.6 சதவீதமும், மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் மற்றும் பிற சேவைகள் 7.3 சதவீதம் என்ற அளவிலும், கட்டுமானம் 6.2 சதவீதம், நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 6.6 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியை கண்டுள்ளதாக இந்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலக தரவு கூறுகிறது.

முந்தைய இரண்டு காலாண்டுகளை விட தற்போதைய மூன்றாம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி, மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

குறிப்பாக, கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பி வரும் தொழில்களால் ஜிஎஸ்டி வசூல், உற்பத்தி குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு, ரயில்வே சரக்கு கட்டணம், ஏற்றுமதி வளர்ச்சி, பயணிகள் வாகன விற்பனை அதிகரிப்பால் ஏற்படும் வருவாய் போன்றவை சாதகமான போக்கை அடைந்து வருவதாக அரசு நம்புகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், இறங்குமாக இருக்கும் ஜிடிபி சரிவு, இனி மேல்நோக்கியதாக முன்னேறும் என்று இந்திய நிதித்துறை நம்புகிறது. பொருளாதார செயல்பாடுகள் அதிகமானால் அரசின் செலவினம், நுகர்வோர் தேவை போன்றவை தடையின்றி நடக்கும் என கருதும் அரசு, நான்காம் காலாண்டின் வளர்ச்சி, அரசுக்கும் தொழில் வர்த்தகத்துறையினருக்கும் சாதகமானதாக இருக்கும் என்று கருதுகிறது.

ஆனால், தற்போதைய அறிக்கை வளர்ச்சியும் அல்ல சரிவும் அல்ல என்று கணிக்கும் தொழில்துறை நிபுணர்கள் இது ஒரு சில துறைகளில் மட்டுமே ஏற்றம் காணப்பட்ட வளர்ச்சியே தவிர முழுமையான வளர்ச்சி கிடையாது. இது ஆங்கில எழுத்தான "கே" வடிவிலான மீளும் அறிகுறி மட்டுமே என்று அழைப்பதாகக் கூறுகிறார் பிபிசி தொழில்துறை செய்தியாளர் நிதி ராய்.

காங்கிரஸ் விமர்சனம்

இந்த நிலையில், ஜிடிபி மூன்றாம் காலாண்டு வளர்ச்சி 0.4 சதவீதம் என்ற சொற்ப அளவிலேயே இருப்பது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இருக்கவில்லை என்பதை உணர்த்துகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இப்போதாவது அலட்சியம் காட்டும் பிரதமரும் நிதியமைச்சரும் உண்மையை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புவதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: