அதானி ஸ்பான்சர் செய்த விருதை மறுத்த கவிஞர் சுகிர்தராணி : "வெளிச்சத்துக்காக செய்யவில்லை"

    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தனக்கு அறிவித்திருந்த 'தேவி' விருதை வேண்டாம் என கூறியிருக்கிறார் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மையான ஸ்பான்சராக இருந்ததுதான் தான் விருதினை மறுப்பதற்குக் காரணம் என்கிறார் அவர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'தேவி' என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பெண் ஆளுமைகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான சுகிர்தராணிக்கு 'இலக்கியம் & தலித் இலக்கியத்தில்' சிறந்த பங்களிப்பைச் செய்துவருபவர் என்ற அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விருதை மறுப்பதாக அறிவித்தார் கவிஞர் சுகிர்தராணி.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ' இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம்தான் முதன்மை ஸ்பான்சராக இருக்கிறது, நான் பேசும் அரசியலுக்கும், கொண்டுள்ள கொள்கைக்கும், சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து விருது பெறுவதில் எனக்கு சிறிதும் உவப்பில்லை, எனவே நான் இந்த விருதை மறுக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கிய பங்கு வகித்து வரும் சுகிர்தராணி, கடந்த 25 ஆண்டுகளாக பெண் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அவரது இந்த அறிவிப்பு தேசிய அளவில் பரவலான கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது. விருதை மறுத்தது குறித்தும், அதற்கான பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் சுகிர்தராணி.

கே. 'தேவி' விருது உங்களுக்கு அறிவிக்கப்பட்டது எப்போது? விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாக மறுப்பு தெரிவித்தது ஏன்?

ப. அடிப்படையில் நான் ஒரு கடவுள் மறுப்பாளர். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகிய மூன்று பேருடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் படித்து வளர்ந்தவர் என்பதால் பொதுவுடமை தத்துவத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அவர்கள் மூன்று பேரின் சிந்தனைகளை உள்வாங்கிகொண்டுதான் நான் தொடர்ந்து இயங்கி வருகிறேன்.என்னுடைய எழுத்துகளிலும் அதுதான் வெளிப்படும். இந்த மாதிரியான நிலையில்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் என்னை 'தேவி' விருதுக்கு தேர்ந்தெடுத்திருப்பதாக டிசம்பர் 23ஆம் தேதியன்று அழைத்து கூறினார்கள். பின்னர் அலுவலகரீதியாக மின்னஞ்சலும் அனுப்பி உறுதி செய்தார்கள்.

முதலில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் கடவுள் மறுப்பாளராக இருக்கும் நான் ' தேவி' என்ற கடவுளின் பெயரில் உள்ள விருதைப் பெறுவதில் சிறு தயக்கமும் இருந்தது. ஆனால், அது குறித்து சிலரிடம் விசாரித்தபோது 'தேவி' என்னும் சொல்லை பெண்களின் சக்தியாக கருதிதான் இந்த விருது வழங்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தினார்கள். அதற்கு பின்னர் தான் இந்த விருதை ஏற்றுகொள்கிறேன் என கூறி டிசம்பர் 28ஆம் தேதியன்று அவர்களிடம் உறுதிப்படுத்தினேன்.

அதற்கு அடுத்ததாக ஜனவரி மாத இறுதியில் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது.

பிப்ரவரி 8ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்ததையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் விருது பெறுபவர்கள் குறித்த காணொளிகளை வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். வேலை பளுவின் காரணமாக அந்த காணொளிகளை நான் பிப்ரவரி 3ஆம் தேதிதான் பார்த்தேன். அதில் அதானி குழுமத்தின் லோகோ இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் பங்கு என்ன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவிடம் கேட்டு அறிந்துகொண்டேன். இந்த நிகழ்ச்சிக்கு அதானி குழுமம்தான் முதன்மையான ஸ்பான்ஸர் என்று தெரிய வந்தது. என்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது போலவே எந்தவொரு நிலையிலும் நம்முடைய கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் மாறான முறையில் நாம் செயல்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனவே இந்த விருது எனக்கு வேண்டாம் என அவர்களிடம் முறையாக தெளிவுபடுத்தினேன். அவர்கள் அதை புரிந்துகொண்டார்கள்.

கே. அப்படியென்றால் உங்களுடைய இந்த முடிவிற்கு ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முடிவுகள்தான் காரணமா?

ப. ஆமாம். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. ஒரு நிறுவனம் இப்படியான ஒரு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்டு வரும்போது, பொதுவுடைமை கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி மக்களுக்காக எழுதி வரும் நான், என்னை அங்கீகரித்து விருது வழங்குகிறார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முறையாக இருக்காது. இது அதானி குழுமம் என்று அல்ல, அந்த இடத்தில் எந்த நிறுவனம் இருந்திருந்தாலும் இதே முடிவைத்தான் நான் எடுத்திருப்பேன்.

அனைத்து பன்னாட்டு பெருநிறுவனங்களும் தங்களுடைய வருமானத்திலிருந்து CSR FUNDக்கு குறிப்பிட்ட அளவு நிதியளித்து வருகின்றன. அதனால் பல பள்ளிகளும், கிராமப்புறங்களும் பயன் அடைகின்றன. அதையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டுதான் வருகிறோம். ஆனால் ஒரு நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் பங்களிப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது .

கே. ஆனால் உங்களுடைய எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இது. அதை மறுத்துவிட்டதில் வருத்தம் இருக்கிறதா?

ப. நிச்சயமாக இல்லை. இது நான் சுயமாக யோசித்து, மிக தெளிவாக எடுத்த முடிவு. அதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள், தலித் மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் போன்றவை மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமக்கு ஒரு நீண்ட அரசியல் மரபு இருக்கிறது. இப்படியொரு முடிவு எடுத்ததற்கு அத்தகைய அரசியல் தாக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

'உனக்கு நீயேதான் ஒளி' என்று புத்தர் கூறுகிறார். அப்படியென்றால் சுகிர்தராணிக்கு சுகிர்தராணிதான் ஒளி. அங்கீகாரம் என்பது விருதுகளில் மட்டுமல்ல. என்னுடைய எழுத்து என்பது மக்களுக்கான எழுத்து. எனக்கு அந்த மக்களுடைய அங்கீகாரமே போதுமானது.

கே. உங்களுடைய இந்த அறிவிப்பு பெருவாரியான கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது. இதை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா?

ப. இல்லை. இதன்மூலம் நாம் பேசப்படுவோம் என்றெல்லாம் நினைத்து இதை செய்யவில்லை. எதையும் யோசிக்காமல் தனிச்சையாக எடுத்த முடிவு இது.

உலகப்புகழ் பெற்ற வெர்சோ பதிப்பகம் கடந்த 4000 ஆண்டுகளில் உலகளவில் இலக்கியத் துறையில் சிறந்த பங்காற்றிய பெண் எழுத்தாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பேர் கொண்ட பட்டியலில் என்னுடைய பெயரும் இருந்தது. அதே போல் ஜெர்மன், மலேசியன், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் என்னுடைய படைப்பு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது அனைத்தையும் நான் பெருமையாக கருதுகிறேன். எனவே ஒரு விருதை மறுத்து அறிவிப்பு வெளியிட்டால் அதன்மூலம் வெளிச்சம் பெறுவோம் என்று நினைத்து இதை செய்யவில்லை.

கே. உங்களுடைய சக எழுத்தாளர்களும், நண்பர்களும் இதை எப்படி பார்க்கிறார்கள்?

ப. அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நிறைய அழைப்புகள் வருகின்றன. உண்மையில் இது எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை.

கே. தனி மனிதராக ஒருவர் தன்னுடைய கொள்கைகளுக்காக இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

ப. இங்கே பெரும்பான்மையான மக்களுக்கு சமூக நலன் சார்ந்து சிந்தனைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்குமென தனி கொள்கைகளும் சித்தாந்தங்களும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் நடைமுறையில் சரியான நேரத்திலும் இடத்திலும் வெளிப்படுத்துவதில் சிலருக்கு சற்று தயக்கம் இருக்கலாம். ஆனால் நம்முடைய கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் சரியான நேரத்தில் வெளிப்படுத்தினால்தான் அதற்கு நாம் நியாயம் சேர்க்க முடியும்.

இப்போது என்னுடைய செயல்கூட அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீப்பொறியாகத்தான் நான் பார்க்கிறேன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: