நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர்கள் விஷாலும் கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் களமிறங்கின. இதில், தலைவர், துணைத் தலைவர்கள் 2 பேர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றன.

இதில் பாண்டவர் அணி சார்பில் நாசர் தலைவர் பதவிக்கும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியும் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிட்டனர். சுமார் 3,000 வாக்குகள் உள்ள நடிகர் சங்கத்துக்கான தேர்தல் என்பது பொதுத்தேர்தலையும் விஞ்சும் வகையில் பரபரப்புடன் நடந்து முடிந்தன. இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சௌத் இந்தியன் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதையடுத்து தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், `தேர்தல் செல்லும்' என்றும் `வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம்' எனவும் உத்தரவிட்டது. அதன்படி நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பாக்கியராஜ் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் தலைமையில் போட்டியிட்ட சங்கரதாஸ் அணி தோல்வியடைந்துள்ளது.

முன்னதாக வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் நாளில் பதிவான வாக்குகளைவிட 138 வாக்குச் சீட்டுகள் அதிகமாக இருந்ததாகவும் கூறி சங்கரதாஸ் அணியினர் வெளியேறினர். முடிவில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும் பொருளார் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே அணி சார்பாக போட்டியிட்ட பூச்சி முருகனும் கருணாஸும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையும் இதே அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: