டிக்கிலோனா: திரை விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: சந்தானம், அனகா, ஷிரின் கஞ்ச்வாலா, யோகிபாபு, ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர்; படத்தொகுப்பு: ஜோமின்; இசை: யுவன் ஷங்கர் ராஜா; இயக்கம்: கார்த்திக் யோகி.

அசோக்செல்வனும் ரித்திகா சிங்கும் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'ஓ, மை கடவுளே' படத்தின் சாயலில் சந்தானத்தின் முத்திரையோடு வெளியாகியிருக்கும் படம்தான் இந்த 'டிக்கிலோனா'.

ஹாக்கி வீரராக விரும்பும் மணி (சந்தானம்), தான் விரும்பிய ப்ரியாவை (அனகா) திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், நினைத்தபடி ஹாக்கி வீரராக முடியவில்லை. மின்வாரியத்தில்தான் வேலை கிடைக்கிறது. இதனால், மனைவியுடன் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்படியாக வாழ்வில் நிம்மதி இழந்து தவிக்கும் மணிக்கு, கால எந்தரத்தில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால், தன் திருமணம் நடக்கும் தினத்திற்குச் சென்று, அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு, தன்னை விரும்பும் மற்றொரு பெண்ணை (ஷரின்)கல்யாணம் செய்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

'ஓ, மை கடவுளே' படத்தில் கடவுளாக வந்து விஜய் சேதுபதி செய்த வேலையை, இந்தப் படத்தில் கால எந்திரம் செய்கிறது. கால எந்திரத்தால் ஏற்படும் குழப்பத்தை வைத்து நகைச்சுவை ரகளை செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மிகக் கவனமாகப் பார்க்காவிட்டால் குழப்பம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள திரைக்கதையை, மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால், பல இடங்களில் நகைச்சுவை ஒர்க்அவுட் ஆகவில்லை.

படத்தில் மூன்று சந்தானங்கள் இருந்தாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் தனித்துத்தெரியும் வகையில் நடித்திருக்கிறார்கள் கதாநாயகிகளான அனகாவும் ஷரினும். யோகி பாபுவும், மொட்டை ராஜேந்திரனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இவர்கள் வரும் காட்சிகளிலும் சொல்லும்படியான நகைச்சுவை ஏதும் இல்லை. கடைசி சில நிமிடங்களில் தலைகாட்டும் மாறன், அட்டகாசம் செய்திருக்கிறார். ஆனந்த்ராஜும் முனீஸ் காந்தும் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார்கள்.

படத்திற்கு பின்னணி இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் துவக்கத்திலும் 'பேர் வச்சாலும்' பாடலிலும் அவரது முத்திரை தெரிகிறது. இந்தப் படத்தில் குறிப்பிட்டு பாராட்டத்தக்கவர், படத்தொகுப்பாளர் ஜோமின். வெவ்வேறு காலகட்டத்தில் படம் நகரும்போது, பெரிய அளவில் குழப்பம் ஏற்படாதவகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார்.

இருந்தபோதும், ஏ1, பிஸ்கோத்து போன்ற படங்களில் இருந்த கலகலப்பும் தெளிவும் இந்தப் படத்தில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :