You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் பிறந்தநாள் : 'உங்கள் விஜய்' உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது.
ஜூன் 22- அன்று தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே…
- தீவிர ரஜினி ரசிகரான விஜய், 1992-ல் வெளியான 'அண்ணாமலை' படத்திற்கு பிறகே கதாநாயகனாவது என தீர்மானித்தார். அதற்கு முன்பு 'வெற்றி', 'குடும்பம்', 'சட்டம் ஒரு விளையாட்டு' என படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார்.
- 'ரசிகன்' படத்தில் அவருக்கு இருந்த 'இளையதளபதி' பட்டம் 'மெர்சல்' படத்தில் இருந்து 'தளபதி' ஆனது.
- விஜய் தனக்கு பிடித்த நடிகையாக ஸ்ரீதேவியை குறிப்பிடுவார். அதே போல, நடனத்தில் சிம்ரன்.
- தன் காதல் மனைவி சங்கீதாவுக்கு விஜய் முதன் முதலாக கொடுத்த பரிசு மோதிரம், பின்பு ஒரு வெள்ளி கொலுசு.
- 'ரசிகன்' படத்தில் 'பாம்பே சிட்டி' பாடல் தொடங்கி 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' வரை தனது சினிமா பயணத்தில் 'உங்கள் விஜய்' பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 34.
- தனது ரசிகர் மன்ற இயக்கத்தினை 2009ம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய்.
- நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவரான விஜய் எந்த ஒரு கடினமான நடன அசைவையும் எளிதில் உள்வாங்கி கொள்வார் என்கிறார்கள் அவருடன் பணியாற்றிய நடன இயக்குநர்கள்.
- சினிமாவில் ஜெயிக்க திறமை, அதிர்ஷ்டம், உழைப்பு இது மூன்றும் முக்கியம் என்பார் விஜய்.
- நடிகர் விஜய்யை மருத்துவர் ஆக்க வேண்டும் என்றே முதலில் அவரது பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால், விஜய்க்கு சினிமா மேல் இருந்த தீவிர ஆர்வத்தாலும் பிடிவாதத்தினாலும் நடிக்க வந்தார்.
- கல்லூரி கால நண்பர்கள்தான் இன்று வரையிலும் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள்.
- 'ரசிகன்' படத்தில் விஜய்யை பாட வைக்கலாம் என இயக்குநர் எஸ்.ஏ.சி. முடிவெடுத்து இசையமைப்பாளர் தேவாவிடம் சொல்லியிருக்கார். அவரும் சம்மதிக்க 45 நிமிடங்களிலேயே தன்னுடைய முதல் பாடலை பாடி முடித்திருக்கிறார் விஜய்.
- தனது பள்ளிகாலங்களில் கிடார் வகுப்புகளுக்கு செல்வது, பாடுவது என இசையிலும் ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார் விஜய்.
- இறை நம்பிக்கை அதிகம் உள்ள நடிகர் விஜய் தனது பிறந்தநாளின் போது சாமி கும்பிட்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
- படம் உருவாக்கத்தில் ஆர்வமுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து 'வேட்டைக்காரன்' படத்தின் ஒரு பாடலிலும், மகள் திவ்யா 'தெறி' படத்தின் இறுதி காட்சியிலும் நடித்துள்ளனர்.
- துறுதுறுவென இருந்த விஜய் தங்கை வித்யா இறப்பிற்கு பிறகு அதற்கு நேர்மாறாக அமைதியான தனிமை விரும்பியாக மாறினார். இதில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் என விரும்பியே அவரது திருமணத்தை சீக்கிரம் நடத்தி வைத்திருக்கிறார்கள் பெற்றோர்.
- 'கில்லி', 'போக்கிரி' உட்பட நடிகர் மகேஷ்பாபுவின் தெலுங்கு படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார் விஜய். இதில் ''போக்கிரி' படம் தெலுங்கை விட தமிழில் நன்றாக இருக்கிறது' என மனம் விட்டு பாராட்டினார் மகேஷ்பாபு.
- தனது அம்மா ஷோபா இயக்கத்தில் வெளியான 'நண்பர்கள்', 'இன்னிசை மழை' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளார் விஜய்.
- நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த 'ரவுடி ரத்தோர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார் விஜய். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீமேக்.
- பின்பு நடிகர் விஜய்யின் 'துப்பாக்கி' படம் இந்தியில் 'ஹாலிடே' என ரீமேக் ஆனது. இதில் அக்ஷய்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் இவற்றிலும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
- 'மாஸ்டர்' படத்தின் போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதற்கு பிறகு 'மாஸ்டர்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நெய்வேலியில் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி அந்த வருடத்தில் அதிகம் பகிரப்பட்ட பதிவாக ட்விட்டர் இந்தியா இந்த வருடம் சொன்னது.
- 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி66' இயக்குநர்களில் தெலுங்கு இயக்குநரான வம்சியின் பெயர் அடிபடுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் விஜய் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் இதுவாக இருக்கும்.
- கடந்த வருடத்தில் நடிகர் விஜய் சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நெய்வேலி செல்ஃபி மற்றும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட புகைப்படங்களாக ட்விட்டர் இந்தியா தெரிவித்திருந்தது.
- 'நாளைய தீர்ப்பு' படத்தின் தோல்விக்கு பிறகு தன் நண்பர் விஜய்காந்துடன் இணைந்து விஜய்யை 'செந்தூரப்பாண்டி' படத்தில் இயக்கி நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. நடிகர் விஜய்யின் தொடக்க கால பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது மட்டுமில்லாமல் அவருக்கு பெயரும் வாங்கி கொடுத்தது.
- நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகரான விஜய், முதன் முதலில் கவுண்டமணி செந்திலுடன் இணைத்து நடித்த படம் 'ரசிகன்'
- விஜய் முதன் முதலில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்தது 'பிரியமுடன்' படத்தில்தான். இதில் படம் இறுதியில் விஜய் இறப்பது போன்றும் கதை அமைந்திருக்கும்.
- 'பிரியமுடன்' படத்திற்கு பிறகு 'அழகிய தமிழ்மகன்' படத்தில்தான் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் விஜய்க்கு இரட்டை வேடம்.
- விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'துள்ளாத மனமும் துள்ளும்' கதை முதலில் வடிவேலுவுக்காக எழுதப்பட்டது. சில காரணங்களால் அதில் வடிவேலுவால் நடிக்க முடியாமல் போக, பின்பு விஜய் உள்ளே வந்ததும் அவருக்கு ஏற்றாற்போல கதையில் சில மாற்றங்களை செய்தார் இயக்குநர் எழில்.
- நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'பிரியமானவளே'. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் 'ஜூன் ஜூலை மாதத்தில்' பாட்டுக்கான படப்பிடிப்பின் போதுதான் அவரது மகன் சஞ்சய் பிறந்தார்.
- 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவின் 'நேசமணி' கதாப்பாத்திரம் மிகப்பெரிய வெற்றி. இதில் நடிகர் விஜய் மற்றும் வடிவேலு இணையும் ரசிகப்பட்டது. இந்த படத்தில்தான் முதன் முறையாக இருவரும் இணைந்து நடித்தனர்.
- பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் நடித்த ஒரே படம் நடிகர் விஜய்யுடன் 'தமிழன்' படம் மட்டுமே.
- 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி', 'சிவகாசி' என நடிகர் விஜய்யின் கமர்ஷியல் படங்கள் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் டி.ஆர்.பி, சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் என மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
- நடிகர் விஜய்யின் 50வது படம் 'சுறா'. அவருடைய 50வது படம் தோல்வியடைந்தது. இந்த படத்தில் இருந்துதான் அரசியல் கருத்துகளையும், தன் நிலைப்பாட்டையும் படங்களில் பதிவு செய்ய தொடங்கினார் விஜய்.
- தனது வழக்கமான கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இது '3 இடியட்ஸ்' இந்தி படத்தின் ரீமேக்.
- 'தலைவா' படத்தின் தலைப்பிற்காகவும் அதில் பேசப்பட்ட அரசியல் விஷயங்களுக்காகவும் பிரச்சனை கிளம்ப படம் வெளியாவதிலேயே ஏகப்பட்ட சிக்கல் வந்து பின்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என இயக்குநர் அட்லியுடன் இணைந்த மூன்று படங்களுமே நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி நாயகனாக மாற்றியது.
- 'பிகில்' படத்தில் 'ராயப்பன் - மைக்கேல்' என அப்பா- மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் விஜய்.
- 'பிகில்', 'மாஸ்டர்' என இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. குறிப்பாக கொரோனா லாக்டவுண் தளர்வுகளுக்கு பின்பு வெளியான 'மாஸ்டர்' படத்தின் வசூல் உலக அளவில் பல ஹாலிவுட் படங்களின் வசூலுடன் போட்டி போட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆக்ஷன் ஹீரோ, காதல் கதைகள், செண்டிமெண்ட் படங்கள், கமர்ஷியல் என மாஸ் கதாநாயகனுக்கான பிம்பங்கள் ஓரங்கட்டி வைத்துவிட்டு தற்போது நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் விஜய். அதன் தொடக்கமாகவே, லோகேஷ் கனகராஜூடன் 'மாஸ்டர்', நெல்சன் திலீப்குமாருடன் 65வது படமான 'பீஸ்ட்' உள்ளிட்ட படங்களின் தேர்வு என்கிறார்கள்.
- பொது இடத்தில் அமைதியான நபராக வலம் வரும் விஜய் மிகவும் கலகலப்பான நபர் என்கிறார்கள் நெருங்கிய நண்பர்கள். இந்த நகைச்சுவை உணர்வு படத்தில் அவரது கதாப்பாத்திரங்களில் இருபப்தையும் கவனிக்கலாம்.
- பட விழா மேடைகளில் ரசிகர்களுடன் பேசும் போது, 'நண்பா' என நலம் விசாரிப்புகளோடு 'குட்டி கதை' சொல்வதையும் சமீப கால வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜய்.
- சமூக வலைதளங்களில் எப்போதாவது பதிவிடுவது விஜய்யின் வழக்கம். ஆனால், அப்படி அவர் பதிவிட்டால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களிடையே அன்று அதுதான் வைரல். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுப்பதிவுக்காக கறுப்பு, சிவப்பு நிறத்திலான சைக்கிள், மாஸ்க்கோடு தனது வீட்டில் இருந்து விஜய் புறப்பட, பல குறியீடுகள் கண்டுபிடித்து அன்று அந்த வீடியோவும், புகைப்படங்களும்தான் சமூக வலைதளங்களின் பேசு பொருளாக இருந்தது.
- 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி, வெற்றிமாறன், மீண்டும் லோகேஷ் கனகராஜ் என பல இயக்குநர்களின் பெயர்கள் வரிசை கட்டி நிற்க யாரும் எதிர்பாராத விதமாக நெல்சன் திலீப்குமார் உள்ளே வந்தார்.
- இதில் 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு 'தளபதி65'-ல் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பெயரும் அடிபட்டது. இதனை ஒரு பேட்டியில் அவரும் உறுதி செய்தார். ஆனால், தயாரிப்பு தரப்புடன் மனக்கசப்பு, கதையில் மாற்றங்கள் போன்ற காரணங்களால் ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் இருந்து விலக நேரிட்டது.
- அதேபோல, 'தளபதி65' படத்திற்கு முதலில் இசையமைக்க ஒப்பந்தமானது இசையமைப்பாளர் தமன்தான். ஆனால், நெல்சன் 'தளபதி65' படத்தின் இயக்குநராக அனிருத் முக்கிய காரணம் என சொல்லப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தின் இசையமைப்பாளராக உள்ளே வந்தார்.
- கொரோனா காலத்தில் இறந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் குடும்பத்தை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னது மட்டுமில்லாமல், அவர்களுக்கான பண உதவிகளையும் செய்திருக்கிறார் விஜய்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்