பாவக் கதைகள்: திரை விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: சாந்தனு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், அஞ்சலி, கல்கி கொச்சலின், சிம்ரன், சாய் பல்லவி; இயக்குநர்கள்: சுதா கொங்கரா, வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன்.

ஜாதிப் பெருமிதம், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சிகளும் ஊர் என்ன சொல்லுமோ என்ற கவலையும் பெற்றோரை எம்மாதிரி கொடூரமான எல்லைகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்த Anthology திரைப்படத்தின் மையம். நெட்ஃப்ளிக்சில் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் நான்கு படங்கள். நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'தங்கத்'தில், பெண்ணாக மாறி தன் நண்பன் சரவணனை (சாந்தனு பாக்யராஜ்) கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறான் சத்தார் (காளிதாஸ் ஜெயராம்).

ஆனால், சரவணன் தன் தங்கையைக் காதலிப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவுகிறான். அதில் உயிரையே விடுகிறான். அவமானம், அச்சம் போன்ற உணர்வுகள் உந்தித்தள்ள பெற்ற பிள்ளையை சாகவிடுகிறார்கள் அவனது பெற்றோர். 80களில் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நடப்பதைப் போல அமைந்திருக்கும் இந்தப் படம், பல சிக்கல்களை அரை மணி நேரத்திற்குள் முன்வைக்கிறது. இருந்தாலும், எடுக்கப்பட்ட விதமும் திரைக்கதையும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. சாந்தனுவும் காளிதாஸ் ஜெயராமும் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகின்றனர்.

அடுத்த படம், விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'லவ் பண்ண உட்றனும்'. ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம்.

இந்த நான்கு படங்களில் சற்று நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் இதுதான். அடுத்து என்ன நடக்குமோ என்ற உணர்வும் படம் முழுக்க நீடிக்கிறது. ஆனால், படத்தின் முடிவு ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது. முதல் மகளை ஆணவக் கொலை செய்தவர், இரண்டாவது மகளை அப்படிச் செய்யாமல் விடுவதால், அவள் உதவியுடன் ஃப்ரான்சிற்குப் போய் பிரெஞ்சு கற்றுக்கொள்கிறார். மூன்று மகள்கள் இருந்து, மூவரும் காதலித்திருந்தால், இரண்டு பேரைக் கொன்றுவிட்டு, மூன்றாவது மகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகியிருப்பார் போலிருக்கிறது. தவிர, ஒரு ஆணவக் கொலை செய்த தந்தையை மகள் எப்படி சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் தெரியவில்லை.

மூன்றாவது படம், வான்மகள். படத்தை இயக்கி நடித்திருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். சத்யா (கௌதம்) - மதி (சிம்ரன்) தம்பதியின் 12 வயது மகள் பொன்னுத்தாயியை யாரோ சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட, அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் இருவரும். மகளை எப்படித் தேற்றுவது, காவல்துறையிடம் சொன்னால் ஊரில் என்ன நினைப்பார்கள் என குழம்பித் தவிக்கும் பெற்றோர் கடைசியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிப் படம். இந்தப் படத்திலும் காவல்துறையை அணுகினால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற குறித்த தயக்கத்துடனேயே, வேறு ஒரு புள்ளியில் முடிகிறது படம்.

நான்காவது படம், 'ஓர் இரவு'. இயக்கியிருப்பவர் வெற்றிமாறன். காதலித்து, வீட்டை விட்டு வெளியேறுகிறாள் மகள் (சாய் பல்லவி). அவள் கர்ப்பமடைந்த செய்திகேட்டு மகள் வீட்டிற்கு வரும் தந்தை (பிரகாஷ் ராஜ்), சொந்த ஊரில் வளைகாப்பு நடத்த வேண்டுமென்கிறார். நம்பி சொந்த ஊருக்குச் செல்லும் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. மொத்தமுள்ள நான்கு படங்களிலும் ஜாதியின் வீச்சை முகத்தில் அறையும்படி சொல்லும் படம் இதுதான். இம்மாதிரி நிகழ்வுகளில் நீதி கிடைப்பது எவ்வளவு அரிது என்பதைச் சொல்வதோடு படம் முடிகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். இத்தகைய அழுத்தத்தை குடும்பத்தின் மீது சுமத்தும் சமூகத்தின் மீது பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் இந்தத் தொகுப்பின் பலவீனம்.

இந்தத் தொகுப்பில் முதல் இரண்டு படங்களில் உள்ள விறுவிறுப்பு அடுத்த இரு படங்களில் சற்றுக் குறைவு. ஆனால், அழுத்தமான படங்கள் என்று பார்த்தால் முதல் படமான 'தங்கமு'ம் கடைசிப் படமான 'ஓர் இரவு'ம்தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :