பாலாவின் 'வர்மா': இலவசமாக பார்க்க முடியாது; தமிழ் ராக்கர்ஸில் தேடும் ரசிகர்கள்

பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ஓடிடி தளங்களில் நேற்று, அக்டோபர் 6 அன்று, வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன்னரே உருவான ரீமேக்கான 'வர்மா' நேற்று வெளியானது.

எனினும் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் இலவசமாக பார்க்க முடியாது. பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும்.

இதை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் இலவசமாக பார்க்க முடியாது என்பதால் இப்போதே இதன் 'பைரேட்டட் காப்பி'-ஐ கூகுளில் தேடத் தொடங்கிவிட்டனர் பல தமிழ் சினிமா ரசிகர்கள்.

இன்று, புதன்கிழமை காலை, கூகுளில் இந்திய அளவில் தேடப்பட்டவற்றில் 'வர்மா', 'தமிழ் ராக்கர்ஸ்' ஆகியவையும் அடக்கம்.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் 'வர்மா' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.

இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக ரீமேக் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆதித்யா வர்மா திரைப்படம் திரையரங்கில் வெளியான போதும் பாலா இயக்கிய 'வர்மா' படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். இந்நிலையில் அக்டோபர் 6 அன்று பாலா இயக்கிய வர்மா ஓடிடி தளத்தில் வெளியானது.

'வர்மா' ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவலை பகிர்ந்திருக்கும் நடிகை ரைஷா வில்சன், இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி தமிழில் ரீமேக்

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் பாலா.

படப்பிடிப்பு தொடங்கப்பட்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தார் பாலா. திரைப்படத் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக விளம்பரங்களைத் செய்ய ஒரு பெரிய ஆடியோ வெளியீட்டு நிகழ்வை நடத்தினர்.

படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

பின்பு தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

''எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'வர்மா' படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அர்ஜுன் ரெட்டி படத்திற்கும் வர்மா படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது," என்று கூறி படத்தைக் கைவிடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

'வர்மா' பட சர்ச்சை: விலகியது ஏன்?- பாலா விளக்கம்

இந்நிலையில் 'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பாலா வெளியிட்ட அறிக்கையில், '' 'வர்மா' படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்," என்று பாலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலாவின் வர்மா செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: