You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Betaal: நெட்ஃபிளிக்ஸ் தொடர் விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இறந்தும் இறவாமல் இருக்கும் zombieகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள், தொடர்கள் வந்துவிட்டன. இவற்றில் மிகச் சில படங்களே சற்றேனும் ரசிக்கத்தக்கவை. இருந்தபோதும் இந்த 'ஜோம்பி'களை மையமாக வைத்து கதைகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. Betaal - நெட்ஃப்ளிக்சில் வெளியாகியிருக்கும் மற்றுமொரு 'ஜோம்பி' த்ரில்லர்.
ஏதோ ஒரு வட இந்திய மாநிலம். அங்கே சாலை அமைக்கும் பணிக்காக எப்போதோ மூடப்பட்ட மலை குகைப் பாதையைத் திறக்கச் சொல்கிறார் ஒரு காண்ட்ராக்டர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அந்த குகையைத் திறக்க வேண்டாம்; கெட்டதுதான் நடக்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், காண்ட்ராக்டர் கேட்கவில்லை. அவருக்கு உதவியாக ஒரு அதிரடிப் படையும் அனுப்பப்பட்டிருக்கிறது.
பழங்குடியின மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, குகையை மூடியிருந்த சுவர் உடைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அந்த குகைக்குள் போனவர்களுக்கு ஏதேதோ நேர்கிறது. ஒரு கமாண்டருக்கு தலைமுடி முழுக்கவும் நரைத்துவிடுகிறது. இருந்தபோதும் கடைசி நபர்வரை சொல்லச் சொல்ல கேட்காமல் குகைக்குள் போய் பார்க்கிறார்கள்.
அந்த குகைக்குள் என்ன இருக்கிறது, அவர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை (நாம் உயிரோடு தப்புகிறோமா என்பதுதான் உண்மையான கதை!).
ஒரு நாட்டுப்புறக் கதையைப் போல இந்தத் தொடர் தொடங்குகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திற்கு பழங்குடியின மக்கள் VS சாலை போடும் காண்ட்ராக்டர் என்ற ரீதியில் செல்கிறது. பிறகு, zombie கதையாக மாறுகிறது. முடிவில் zombieகள், அவற்றிடம் சிக்கிக்கொண்டவர்கள், இயக்குனர் என எல்லோரும் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறார்கள்.
இயக்குனர் பேட்ரிக் க்ரஹாம் Goul என்ற மிக அட்டகாசமான ஒரு அரசியல் த்ரில்லரை நெட் ஃப்ளிக்ஸிற்காக இயக்கியவர். Leila தொடரின் சில பாகங்களை இயக்கியவர். ஆனால், இந்தத் தொடரில் ரொம்பவுமே சோதித்திருக்கிறார்.
ஒரு குகைக்குள் செல்லும் மனிதர்கள் யாரோலோ தாக்கப்பட்டு இறந்துபோனால், மற்றவர்கள் உதவிகோரி அங்கிருந்து தப்ப மாட்டார்களா? தொடர்ந்து உள்ளே போய் சாவார்களா? அதுவும் மனைவி, குழந்தையோடு இருக்கும் காண்ட்ராக்டர் எதற்காக அந்தக் காட்டுக்குள், இரவு நேரத்தில் இந்த விபரீதத்தில் ஈடுபடுகிறார்?
இதற்கு நடுவில் நாட்டுப் பற்று, மஞ்சள் - உப்பின் மகிமை, பழங்குடியினரின் வீரம் என பலவற்றை கலந்துகட்டி அடிக்கிறார்கள். இந்த zombieகள் எல்லாம் பிரிட்டிஷ் ஜோம்பிகள். அவற்றை துப்பாக்கியால் தடதடவென சுடும் ஒரு வீரர், "இந்தா வாங்கிக்க.. ஜாலியன் வாலாபாகிற்கு" என்று உக்கிரமாக சொல்லிக்கொண்டே சுடுகிறார். அதற்கு முதல் நாள்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றிப் படித்திருப்பார் போலிருக்கிறது.
இந்தக் கதையில் அப்பாவி பழங்குடியினரை அதிரடிப் படையினர் சுட்டுக்கொல்கிறார்கள். பிறகு அவர்கள் ஜோம்பிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். பழங்குடியினரைச் சுட்டுக் கொன்றவர்கள்தானே; ஜோம்பிகளிடம் சிக்கி சாகட்டும் என்றுதானே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால், படையினர் திடீரென நல்லவர்களைப் போலக் காட்டப்படுகிறார்கள். ஒரு சின்னத் தொடரில் ஏன் இவ்வளவு குழப்பம்?
மொத்தம் நான்கே எபிசோடுகள்தான். அதில் முதல் எபிசோட் மட்டும் சற்று பரவாயில்லை ரகம். மற்ற மூன்றும் 'ஜோம்பிகளே தேவலை' ரகம்.