You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா? - வசந்த பாலன் கோபம்
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது
கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படமாக பாரம் படமும், இந்தியில் அந்தாதுன் திரைப்படமும் தேர்ந்தேடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தேசிய விருது வழங்குவதில் தமிழ் கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.
"தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி"
வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தனர். யுவனின் இசை மற்றும் தேனி ஈஸ்வரினின் ஒளிப்பதிவில் என்ன குறை கண்டீர்கள் ? பிறகு கேள்விப்பட்ட போதுதான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்கள் யாரும் தேர்வுக் குழுவுக்கு அழைக்கப்படவில்லை," என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் தேர்வுக்குழுவை சாடியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு தன்னை அழைத்ததாகவும், முப்பது நாட்கள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா என்றும், இது கண்துடைப்பின்றி வேறென்ன? என்றும் வசந்த பாலன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்நிலை மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட மம்மூட்டி
பேரன்பு திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைக்காததால் மம்மூட்டியின் ரசிகர்கள் தேர்வு குழுவின் தலைவர் ராகுல் ரவைலை திட்டித்தீர்த்து மெயில் அனுப்பியுள்ளனர். ரசிகர்களின் இந்த செய்கையை இணையத்தில் மம்மூட்டியிடம் புகார் கூறிய ராகுல், பேரன்பு திரைப்படம் உள்ளூர் தேர்வு குழுவால் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்வு குழுவின் முடிவை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றும் கடுகடுத்திருந்தார். மம்மூட்டியும், ரசிகர்களின் தொந்தரவுக்காக மன்னிப்பு கேட்பதாக கோரினார்.
Jio Giga fiber எப்படி வாங்குவது? | Full HD TV Free - All you need to know | Reliance
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்