You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாமி 2 - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் 2003ல் வெளிவந்து வெற்றிபெற்ற சாமி படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளி வந்திருக்கிறது. முதல் படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.
முதல் பாகத்தில், திருநெல்வேலியில் பெரும்புள்ளியாக இருக்கும் பெருமாள் பிச்சையை சுட்டுக்கொன்றுவிடுவார் திருநெல்வேலியின் உதவி ஆணையரான ஆறுச்சாமி (விக்ரம்). அதிலிருந்து இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. பெருமாள் பிச்சையைச் (கோட்டா சீனிவாசராவ்) சுட்டுக்கொன்றுவிட்டு நகரை அமைதிக்கு திருப்பியிருக்கும் நேரத்தில் ஆறுச்சாமியின் மனைவி கர்ப்பமாகிறார். செத்துப்போன பெருமாள் பிச்சைக்கு கொழும்பு நகரில் மனைவி (சுதா சந்திரன்) ஒருவர் இருக்கிறார்.
அவருக்கு மூன்று மகன்கள். பெருமாள் பிச்சை காணாமல் போனதை அறிந்து அவரைத் தேடிப்பார்க்க திருநெல்வேலிக்கு வருகிறார்கள் மூவரும். ஆறுச்சாமிதான் அவரைக் கொன்றார் என்பது தெரிந்ததும் அவரையும் அவரது மனைவியையும் கொல்கிறார்கள். அப்போது ஆறுச்சாமியின் மகனாகப் பிறக்கிறார் ராமசாமி(விக்ரம்).
28 வருடங்கள் கழிந்துவிடுகின்றன. தில்லியில் ஒரு அமைச்சரிடம் (பிரபு) பணியாற்றும் ராமசாமி, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து ஐபிஎஸ் பணியை ஏற்கிறார். துணை ஆணையராக திருநெல்வேலி நகரத்திற்கே வருகிறார். தன் தந்தையைக் கொன்ற பெருமாள் பிச்சையின் மகனான ராவணன் பிச்சையும் (பாபி சிம்ஹா) அவன் சகோதரர்களும் (ஜான் விஜய், ஓ.ஏ.கே. சுந்தர்) வேறு சில சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதையும் அறிகிறார். பிறகு எல்லோரையும் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக் கதை. இதற்கு நடுவில் அமைச்சர் மகளுடன் (கீர்த்தி சுரேஷ்) காதல், கல்யாணம் எல்லாம்.
முந்தைய படத்தின் தொடர்ச்சியாக, அதே ஆறுச்சாமி சாகசம் செய்வதாக இருந்தால் புதிதாக கதாநாயகியுடன் டூயட் பாட முடியாது என்பதாலோ என்னவோ, ஆறுச்சாமியின் மகன் இந்தப் படத்தில் சாகசம் செய்வதாக கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதனால், படத்தில் வரும் எல்லோருக்கும் 15 வருடத்தில் 28 வயது கூடியிருக்கிறது. கதாநாயகன் மட்டும் புதிதாகப் பிறந்தவர் என்பதால், அவருக்கு மட்டும் 28 வயது.
முதல் பாகத்தோடு ஒப்பிட்டால் ரொம்பவுமே சாதாரணமான படம். முதல் பாகத்தை மிக மோசமாக பிரதிசெய்து எடுக்கப்பட்ட படமாகவே உருவாகியிருக்கிறது. ஹரியின் மற்றொரு போலீஸ் கதையான சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நாயகன் வெவ்வேறு சாகசங்களை நிகழ்த்துவார். ஆனால், இந்த சாமி தொடரில், முதல் படத்தின் நாயகனைக் காலிசெய்துவிட்டு புதிய நாயகனைப் படைத்திருக்கிறார் ஹரி.
தந்தை மரணமடையும்வரை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கே வராமல் இருக்கும் மூன்று பேர் திடீரென திருநெல்வேலிக்கு வந்து, பணக் கடத்தல் போன்ற மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபடுவது, தந்தைக்கு சிலை வைத்து உள்ளூரில் அராஜகம் செய்வது, காவல்துறை அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என துவக்கமே கொஞ்சம் 'ஜெர்க்' ஆக வைக்கிறது.
ஆறுச்சாமியின் மகன் ராமசாமி சம்பந்தப்பட்ட காட்சிகள், ஆறுச்சாமி காலத்தைவிட பழையதாக இருக்கின்றன. அமைச்சரிடம் வேலை பார்த்து, அமைச்சர் மகளை காதலிப்பது, வில்லன்களை சவால் விட்டுப் பழிவாங்குவது என தாங்க முடியாத அளவுக்குப் பழைய வாடை.
கதாநாயகியை கதாநாயகன் அறைந்தவுடன் காதல் வருவதெல்லாம் தமிழ் சினிமாவில் அற்றுப்போய்விட்டது என்று நினைத்திருந்த நிலையில், இந்தப் படத்தில் மீண்டும் அதை மறு அறிமுகம் செய்கிறார் இயக்குனர். இருந்தபோதும் கீர்த்தி சுரேஷ் - விக்ரம் காதலில் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷின் பாகமும் கவரும்படி இல்லை.
விக்ரமை 28 வயது இளைஞனாகக் காட்ட ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி மிக வயதானவராகத் தோற்றமளிக்கிறார் மனிதர். படம் நெடுக, காதலியை வில்லனைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்.
படத்தின் மற்றொரு சித்ரவதை சூரியின் காமெடி. ஏதேதோ செய்கிறார். ஆனால், சுத்தமாக சிரிப்பே வரவில்லை. ஸ்ரீ தேவி பிரசாதின் இசையும் பாடல்களும் சுத்தமாக படத்தோடு ஒட்டவில்லை.
முதல் பாகத்தில் இருந்த நேர்த்தியான திரைக்கதை, குடும்பக் காட்சிகள், சரியான விகிதத்தில் நகைச்சுவை, ரசிக்க வைத்த பாடல்கள், வலுவான வில்லன், புத்திசாலித்தனமும் தீரமும் நிறைந்த காவல்துறை அதிகாரி பாத்திரம் என எதுவுமே இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை.
விக்ரம் - த்ரிஷா கூட்டணியில் வந்த சாமி படம் குறித்த நல்ல நினைவுகளையும் இந்தப் படம் கெடுக்கிறது என்பதுதான் பெரிய சோகம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்